“தமிழாசிரியர் பணிக்கு இந்தி எதற்கு..? இது அப்பட்டமான இந்தி திணிப்பு”..

வெளிநாடுகளில் தமிழாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இந்தி, சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு  திரும்பப் பெற வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 

Sep 19, 2024 - 12:39
“தமிழாசிரியர் பணிக்கு இந்தி எதற்கு..? இது அப்பட்டமான இந்தி திணிப்பு”..

வெளிநாடுகளில் தமிழாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இந்தி மற்றும் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என  மத்திய அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, வெளிநாடுகளில் உள்ள இந்தியப் பண்பாட்டு மையங்களில் தமிழாசிரியராக பணியாற்ற  அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இலக்கியம், மற்றும் பி.எட்., எம்.எட்., பட்டங்கள் படித்திருக்கவேண்டும் எனவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கல்வி நிறுவனங்கள், பள்ளிகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

மேலும்,  இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கூடுதல் தகுதியாக இந்தி மற்றும் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழ் படித்த பட்டதாரிகள் இடையே வேதனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். 

இது ஒருபுறமிருக்க, அரசியல் தலைவர்களும் இந்த அறிவிப்பு குறித்து  கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.’

 அந்த வகையில் நேற்று, பாமக நிறுவனர் ராமதாஸ், நேற்று இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.  அதில் அவர், தமிழ் இலக்கியத்தில் முதுகலைப்பட்டமும், கல்வியலில் இளநிலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன்,   இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு பெற்றிருக்க வேண்டும் என்பது விரும்பத்தக்க தகுதி என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், வெளிநாடுகளில் தமிழ் படிக்கத் தெரியாதவர்கள் இருப்பின், தமிழாசிரியர்களுக்கு பிற மொழி அறிவு அவசியம் தான். ஆனால், அதற்கு அவர்கள் தமிழும் ஆங்கிலமும் கற்றிருந்தாலே போதுமானது. ஆனால்,  தமிழ் கற்பிப்பதற்கு அதற்கு சற்றும் தொடர்பில்லாத இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தி ஆசிரியர் பணிக்கோ, சமஸ்கிருத ஆசிரியர் பணிக்கோ தமிழ் மொழியறிவு  விரும்பத்தக்க தகுதியாக அறிவிக்கப்படாத நிலையில்,  தமிழாசிரியர் பணிக்கு மட்டும் இந்தி, சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அப்பட்டமான இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு ஆகும் எனவும் தனது கண்டன பதிவில் கூறியிருந்தார்.

இப்படியிருக்க, மதுரை எம்.பி-யும்  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் இந்த தகுதிக்கோட்பாடு அறிவிப்பு குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

அதில், தமிழாசிரியர் பணிக்கு இந்தி மற்றும் சமஸ்கிருத அறிவை எப்படி  பொருத்தமான தகுதிகளாக கருத முடியும்? என கேள்வி எழுப்பியதோடு, இது அப்பட்டமான இந்தி திணிப்பு என்றும், தமிழுக்கு எதிரான இந்த  நடவடிக்கையை கடுமையாக எதிர்ப்பதாகவும்  தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து, தமிழ் ஆசிரியர்களுக்கு இந்தி, சமஸ்கிருத அறிவு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் என்ன என வினவினார்.  அதோடு, தமிழ் படித்து இப்பணிக்கு தகுதி பெற்ற பல ஆசிரியர்கள், இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகள் தெரியாதவர்களாக இருப்பின் அவர்கள் இந்த பணிக்கு தகுதி பெற்றிருந்தும் பணிக்கு விண்ணப்பிக்க  முடியாத நிலை உருவாகும்.

எனவே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற  வேண்டும்” என அந்த அறிக்கையில்  குறிப்பிட்டிருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow