அரசியல் பிரவேசமா? முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷால்
அரசியலுக்கு வருவதாக வெளியான செய்திகளுக்கு நடிகர் விஷால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அரசியலுக்கு வருவதாக வெளியான செய்திகளுக்கு நடிகர் விஷால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடிகர் விஜயைத் தொடர்ந்து விஷாலும் புதிய கட்சி தொடங்குவதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மக்கள் பணிகளை செய்ய மட்டுமே விருப்பம் எனக்கூறி நடிகர் விஷால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழ் மக்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே தன்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணியதாகவும் இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டமாக மக்கள் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி, மாவட்டம் - தொகுதி - கிளை வாரியாக பணி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். தன் தாயார் பெயரில் இயங்கும் தேவி அறக்கட்டளை மூலம் அனைவரும் கல்வி கற்க, மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பெயரில் ஆண்டுதோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் படிக்கவும், விவசாய தோழர்களுக்கும் உதவி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படப்பிடிப்பிற்காக தான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைகளையும் தனது மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருவதாகவும் விஷால் தெரிவித்துள்ளார். எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை என குறிப்பிட்ட அவர், நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவனின் வாக்குப்படி தன்னால் முடிந்த உதவிகளை செய்துகொண்டே இருப்பேன் - அது தனது கடமை என மனரீதியாக கருதுவதாகவும் கூறியுள்ளார்.
தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம், தான் செய்துவரும் மக்கள் பணியை தொடர்ந்து செய்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதாவது முடிவெடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களில் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் எனவும் நடிகர் விஷால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க...எண்ணூரில் உரத் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி முழு கடை அடைப்பு!!!
What's Your Reaction?