புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை...நகைப் பிரியர்கள் அதிர்ச்சி...விலை உயர்வுக்கு என்ன காரணம்?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து சவரனுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மார்ச் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்வதும், அவ்வப்போது குறைவதுமாக இருந்து வருகிறது. சென்னையில் கடந்த 19-ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.49,080-க்கு விற்பனையானது. இதைத் தொடர்ந்து தங்கம் விலை ரூ.49,000-க்கு மேலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று (27-03-2024) சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.49,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.80.20-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் சென்னையில் இன்று (28-03-2024) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50,000-ஐ தொட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50,000-க்கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,250-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.50-க்கும், கிலோ வெள்ளி ரூ.80,500-க்கும் விற்பனையாகிறது.
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலையால் நகை வாங்குபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தை சேமிப்பாக கருதி பெரும்பாலானோர் அதில் முதலீடு செய்வதாலும், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கிக் குவிப்பதாலும் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?