மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..! அமைச்சர் எம்.ஆர்.கே.வின் அசத்தல் அறிவிப்பு..!

தென் மாவட்ட பெருமழையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்காக 2.74 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்

Feb 20, 2024 - 12:17
Feb 20, 2024 - 12:27
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..! அமைச்சர் எம்.ஆர்.கே.வின் அசத்தல் அறிவிப்பு..!

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் மண்புழு உரம் தயாரிக்க ரூ.5 கோடியும் வேளாண் காடு திட்டத்திற்கு ரூ.13 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் 2024-25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தாக்கல் செய்தார். ‘உழுவார் உலகத்தார்க் காணி’, ‘உழுதுண்டு வாழ்வாரே’ என்ற திருக்குறள்களுடன் வேளாண் பட்ஜெட்டை தொடங்கிய அவர், கம்பரின் திருக்கை வழக்கம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களின் செய்யுள்களையும் குறிப்பிட்டார்.  

தமிழ்நாட்டில் 152 லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு 2023-24 ஆண்டில் 158 லட்சமாக உயர்ந்துள்ளது எனக்கூறிய அவர், கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1,50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கரும்பு சாகுபடிக்கு ரூ. 250 கோடி ஊக்கத்தொக்கை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு 45 லட்சம் டன் நெல், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.4,436 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார். 1,564 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தென் மாவட்ட பெருமழையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்காக 2.74 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். 

தொடர்ந்து மண்புழு உரம் தயாரித்து மண் வளத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு ரூ.5 கோடியும், பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடியும் ஒதுக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பாரம்பரிய ரக விதைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், உயிர் வேளாண்மை மாதிரி பண்ணைகளை உருவாக்க ரூ.28 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

பஞ்சகாவியம், அமிர்தகரைசல் மீன் அமிலம் போன்ற இயற்கை இடுபொருள் தயாரிக்க ஆர்வமுள்ள 100 குழுக்களுக்கு 1 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், வேளாண் காடு திட்டத்திற்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow