தமிழ்நாட்டில் ஆயுதக்குழுவை அமைக்க திட்டமிட்டோமா? - சாட்டை துரைமுருகன் விளக்கம்
தமிழ்நாட்டில் ஆயுதப் போராட்டத்தையோ, குழுவையோ தூண்டுவது எங்கள் நோக்கம் அல்ல என நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்டோர் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் NIA அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்டோர் NIA அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள NIA அலுவலகத்தில் இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில், இன்று NIA அலுவலகத்தில் சாட்டை துரைமுருகன் நேரில் ஆஜராகி தனது யூடியூப் சேனலில் வெளியான வீடியோக்களை சமர்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாட்டை துரைமுருகன், “ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான ஈழத்தமிழர்கள் எங்களை ஃபோனில் அழைத்துப் பேசுவர். நாங்கள் பதிவிடும் வீடியோக்களுக்கு வாழ்த்துக் கூறுவர்.ஆகையால் ஃபோனில் தொடர்பு கொண்ட வெளிநாட்டு நபர்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்துள்ளேன். அதேபோல் விசாரணை எதைநோக்கிச் செல்கிறது என்று தெரியவில்லை. நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. ஜனநாயகப் பாதையில் நிற்கிறோம். மக்களாட்சி அரசியல் தத்துவத்தை ஏற்று தேர்தல் அரசியலை சந்தித்து வருகிறோம். ஆகவே ஆயுதப் போராட்டத்தையோ, ஆயுதக்குழுவையோ தூண்டுவது எங்களது நோக்கம் கிடையாது. அதேநேரம் NIA எங்களை சாட்சிகளாகத்தான் விசாரிக்கிறார்கள்.குற்றவாளிகளாக விசாரிக்கவில்லை" என்று விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "NIA கேட்கும் தகவல்களை அளித்து வருகிறோம். விசாரணைக்கு அழைத்தால் எப்போது வேண்டுமானாலும் ஆஜராவதாகக் கூறியுள்ளோம். ஆயுதக்குழுவை அமைக்க திட்டமிட்டதாக கைதான 4 பேருக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஓமலூர் சம்பவத்துக்குப் பிறகே ஆன்லைனில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஓமலூரில் 4 பேர் தவறான பாதையில் சென்றதற்கு நாம் தமிழர் கட்சி பொறுப்பு கிடையாது" என தெரிவித்தார்.
What's Your Reaction?