அரசின் மெத்தனத்துக்கு வானிலை ஆய்வு மையத்தை குறை சொல்லக்கூடாது- ஓ.பி.எஸ் காட்டம்

வீடுகள்தோறும் கணக்கெடுத்து 25,000 ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும்.

Dec 21, 2023 - 13:38
Dec 21, 2023 - 19:11
அரசின் மெத்தனத்துக்கு  வானிலை ஆய்வு மையத்தை  குறை சொல்லக்கூடாது- ஓ.பி.எஸ் காட்டம்

மெத்தனமாக இருந்துவிட்டு வானிலை ஆய்வு மையத்தை அரசு குறை சொல்லக்கூடாது என நெல்லையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”இதற்கு முன்னால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை வைத்து முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அரசு மெத்தனமாக செயல்பட்டுள்ளது.

ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் மாநகர் பகுதிக்குள் புகுந்து அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும்.வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களும் மிகுந்த சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வீடுகள்தோறும் கணக்கெடுத்து 25,000 ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களை புதிதாக மீண்டும் அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்திய வானிலை ஆய்வு மையம் எங்கு, எங்கு மழை பெய்யும். எவ்வளவு மழை பெய்யும் என முன்னெச்சரிக்கையை முறையாக வழங்கி உள்ளது.அரசுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிவிட்டு வானிலை ஆய்வு மையம் மீது குற்றம் சுமத்துவது தவறு.பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளத்தில் இருந்து வரும் மொழிகளை அரசியலாக்குவது என சொல்லக்கூடாது.வியாபார நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்பட்டுள்ளது. அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை கட்டுவதை பொதுமக்களுக்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் தள்ளி வைக்க வேண்டும்.

சென்னையை விட தென் மாவட்டங்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடும்பத்திற்கு 25000 நிவாரணம் வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாக உள்ளது. வாஷிங் மெஷின், டிவி உள்ளிட்ட பொருட்கள் மிகுந்த சேதமடைந்துள்ளது. அதனையும் கணக்கெடுத்து பொருட்களையும் உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜெயலலிதா ஆட்சி புரியும் வேலையில் மத்திய அரசு நிதி வழங்கும் முன்பே மக்களுக்கு எந்த மாதிரியான நிதி வழங்க வேண்டும் என்பதை திட்டமிட்டு மக்களுக்கு வழங்கினர். ஜெயலலிதாவின் ஆட்சியை முன்னுதாரணமாக எடுத்து அரசு செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow