கலைஞர் இருந்திருந்தால் பாஜகவினை ஆதரித்திருப்பார்- முதல்வருக்கு தமிழிசை அறிவுரை
”மற்ற மாநிலங்களில் பிரதமரை முதலமைச்சர்கள் வரவேற்கிறார்கள். பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறார்கள். மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடிப்பது நல்லது இல்லை என்பதை முதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்” என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரம் பின்வருமாறு-
ராகுல் காந்திக்கு கேள்வி:
"இரண்டு நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி, டிரம்ப் சொன்னது போல் பொருளாதாரம் செத்துப் போய்விட்டது என்று சொன்னார். இப்போது தேர்தல் ஆணையம் செத்துப் போய்விட்டது என்று சொல்கிறார். முதலில் காங்கிரஸ் கட்சி எங்கே உயிரோடு இருக்கிறது என்று அவர் சொல்லட்டும்" என்று ராகுல் காந்திக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகவும், மத்திய அரசின் திட்டங்களால் 57% மக்கள் பயன் பெற்றுள்ளதாகவும், 30 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்து மேலே வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு:
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தினம் தினம் போராட்டம் என்று சொல்கிறார். தினந்தோறும் போராட்டம் நடத்த மத்திய அரசு என்ன அநீதி இழைக்கிறது? தமிழக மக்கள் தான் தங்கள் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும், மருத்துவ வசதிகளுக்கும் தான் தினம் போராடி வருகின்றனர். 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்று மருத்துவ முகாம்கள் நடத்துகிறார்கள். ஆனால், மருத்துவமனைகளின் நிலை என்னவாக இருக்கிறது என்பதனை அனைத்து பத்திரிகைகளும் சுட்டிக்காட்டியுள்ளன," என தமிழிசை தெரிவித்தார்.
மத்திய அரசுடன் மோதல் போக்கு கூடாது:
"மத்திய அரசு எல்லா வகையிலும் தமிழகத்திற்கு உதவி செய்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தமிழகத்திற்கு உதவி செய்து கொண்டுதான் இருக்கிறார். ஆனால், தமிழக அரசு மக்களைப் பார்த்து கவலைப்படாமல், மத்திய அரசைப் பற்றி குறை சொல்லி கடிதம் எழுதுவது முதலமைச்சருக்கு வழக்கமாகிவிட்டது. கலைஞர் வழியில் என்று கடிதத்தில் எழுதியிருக்கிறார். ஆனால், கலைஞர்தான் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தார். இன்று கலைஞர் இருந்திருந்தால் பாரதிய ஜனதாவை எதிர்த்து இருப்பார் என கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கலைஞர் இன்று இருந்திருந்தால் பாரதிய ஜனதாவை ஆதரித்திருப்பார்" என்றார்.
"கொள்கை வேறாக இருக்கலாம், கூட்டணி இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், நட்பு ரீதியாக மத்திய அரசைப் பாராட்டலாம். அப்படித்தான் கலைஞர் செய்திருப்பார், அதனால்தான் அவர் கூட்டணி வைத்திருப்பார்.
மற்ற மாநிலங்களில் பிரதமரை முதலமைச்சர்கள் வரவேற்கிறார்கள், பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து ஒரு மோதல் போக்கை கடைப்பிடிப்பது நல்லது இல்லை என்பதை முதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும். ரயில்வே திட்டம், விமான நிலைய விரிவாக்கத் திட்டம், பூண்டி நீர்த்தேக்கம் உயரத்துதல் என நான்கு ஆண்டுகளாக எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். வேளச்சேரியில் குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வருவதாகவும், தென் சென்னையில் குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும் ஆங்கிலப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன. இதையெல்லாம் கவனிக்காமல் தினமும் ஒரு கடிதம் எழுதுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்" என்று தமிழிசை தெரிவித்தார்.
What's Your Reaction?






