சென்னையில் ரெட்டேரி, கே.கே.நகர், நுங்கம்பாக்கம் உள்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த ஆட்சியில் பின்னி மில் நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சமீபத்தில் சோதனை செய்தனர். அப்போது சிக்கிய லேண்ட் மார்க் கட்டுமான நிறுவனத்தில் உரிமையாளர் வீடு,ரெட்டேரி, நுங்கம்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுத்த புகார் தொடர்பாக 8 கார்களில் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்து வருவதால் சம்பந்தப்பட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை, வருமானவரித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.