தமிழ் வளர்ச்சிக்கு உத்தரவாதம் ! தமிழக எதிர்ப்பு மசோதாக்களுக்கு ஒப்புதல்.. தமிழ்நாட்டில் எடுபடுமா பாஜக வாக்குறுதி?

இந்தியாவின் பெருமைமிகு தமிழ்மொழி வளர்ச்சிக்காக நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு எதிர்க்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் - தேசிய கல்விக்கொள்கை உள்ளிட்டவை அமலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Apr 14, 2024 - 14:36
தமிழ் வளர்ச்சிக்கு உத்தரவாதம் ! தமிழக எதிர்ப்பு மசோதாக்களுக்கு ஒப்புதல்.. தமிழ்நாட்டில் எடுபடுமா பாஜக வாக்குறுதி?

மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அறிக்கையின்படி, இந்தியாவின் பெருமைமிகு தமிழ்மொழி வளர்க்கப்படும், திருவள்ளுவர் கலாசார மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தொன்மையான மொழி தமிழை உலகளவில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுவதோடு தமிழ் மொழி பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வருகை தந்த பிரதமர் மோடி, தமிழிலேயே பெரும்பாலும் தனது உரையைத் தொடங்கி, தமிழ்மொழி வளர்ச்சி தொடர்பாக பேசி வந்தார். இந்நிலையில் பாஜகவின் தமிழ் வளர்ச்சி தொடர்பான தேர்தல் வாக்குறுதிகள் தமிழர்களிடையே கவனம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தும் என பாஜக அறிவித்துள்ளது. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்துக்கே எதிரானது என தெரிவித்து இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாடு பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் சதி எனவும் அப்போது கூறப்பட்டது. 39 எம்.பிக்கள் இருக்கும்போதே மத்திய அரசிடம் கெஞ்சும் நிலை உள்ள நிலையில், அதனையும் குறைத்தால் தமிழ்நாடு பலமிழந்து மாநில கோரிக்கைகள் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டது.

அதேநேரத்தில் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்த பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு உள்ளிட்ட விஷயங்களில் அனைவருக்கும் ஒரே நடைமுறையை அறிமுகப்படுத்தும் பொது சிவில் சட்டம், சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கருத்தில் கொள்ளாமல், மதப்பிரிவினையை ஏற்படுத்தி பழங்குடியினரையும் தனிமைப்படுத்தும் எனக்கூறி அதனை உடனடியாகக் கைவிட தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் இதனையே வலியுறுத்தின.

அதேபோல் தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வி அறிமுகம், மும்மொழிக் கொள்கை - வேத கலாசாரம் திணிப்பு, சமூக நீதி புறக்கணிப்பு எனக்கூறி தேசிய கல்விக்கொள்கையை திமுக எதிர்த்தது. புதிய பாரத எழுத்தறிவு திட்டம், PM ஸ்ரீபள்ளி திட்டத்தில் சேர்வதாக தகவல் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி திமுகவை பாஜக கடுமையாக விமர்சித்த நிலையில், ஒரு போதும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்கப் போவதில்லை என திமுக திட்டவட்டமாக அறிவித்தது. இந்நிலையில் தேசியக்கல்விக் கொள்கையையும் அமல்படுத்துவதாக பாஜக அறிவித்துள்ளது.

இவ்வாறாக தமிழ் வளர்ச்சி தொடர்பாக பாஜக அறிக்கையில் பேசப்பட்டுள்ள போதும், தமிழ்நாடு எதிர்க்கும் வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளதால் தமிழ்நாட்டில் பாஜக திட்டம் பலிக்குமா என கேள்வியெழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow