வைகாசி பிறந்தாச்சு.. ஏகாதசியை விட உயர்ந்த விஷ்ணுபதி புண்ணியகாலம்.. நினைத்த காரியம் நிறைவேறும்

சித்திரை முடிந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. இது விஷ்ணுபதி புண்ணியகாலமாகும். இது ஏகாதசி விரதத்தை விட பல மடங்கு உயர்வானது. மன அமைதி மற்றும் மோட்சத்தை தரக்கூடியது இந்த புண்ய காலம். மகாவிஷ்ணுவை மனம் உருகி வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

May 14, 2024 - 15:08
வைகாசி பிறந்தாச்சு.. ஏகாதசியை விட உயர்ந்த விஷ்ணுபதி புண்ணியகாலம்.. நினைத்த காரியம் நிறைவேறும்


ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள் வருவதுண்டு. தமிழ் மாத கணக்கின்படி வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது. வைகாசி மாதம் விஷ்ணுபதி புண்ணியகாலம் பிறக்கப் போகிறது. இது ஏகாதசிக்கு நிகரான புனிதமான நாளாகும். இந்த நாளில் மகாவிஷ்ணுவையும் தாயாரையும் நினைத்து வணங்க தீராத குடும்ப பிரச்சினைகள் தீரும்.

தமிழ் மாதங்கள் 12ல் சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகியவை மஹாவிஷ்ணுவுக்கு உரியவை. ஆனி, புரட்டாசி, மார்கழி,பங்குனி ஆகியவை சிவனுக்குரியவை. 

பிரம்மாவுக்குரிய சித்திரை, ஐப்பசி, ஆடி, தை மாதம் பிறக்கும் காலங்கள் விஷு புண்ய காலம் எனப்படும். சிவனுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் ஷடசீதி புண்ணிய காலம். ஷடாங்கன் என்றால் சிவபெருமானைக் குறிக்கும். விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் விஷ்ணுபதி புண்ய காலம்.

பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மஹாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும், அனுஷ்டிக்கும் விரதமுறையும் அனைத்திலும் சிறந்த பலன் தரும். ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும். மஹாவிஷ்ணுவின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் விளங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது.

வைகாசி மாத விஷ்ணுபதி புண்ணிய காலத்தின் போது உங்களின் பிரச்சினைகளை வேண்டுதல்களை மனமுருகி மகா விஷ்ணுவிடம் சொல்லுங்கள். தங்களின் நியாமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த மூன்று விஷ்ணுபதி காலம் முடிவடைவதற்குள் நிறைவேறும். 

மன அமைதி மற்றும் மோட்சத்தை தரக்கூடியது இந்த புண்ய காலம். இந்த புண்ணிய காலத்தில் விரதம் இருப்பவர்களுக்கு அந்த மகாலட்சுமியின் அருளும் ஸ்ரீமன் நாராயணனின் அருள் நிச்சயம் கிடைக்கும். ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத்தை அனுஷ்டிப்பது, பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இந்த புண்ய காலத்தில் நாம் மஹாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும் ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ தேவியினுடைய மந்திரங்களை கூறி நமது சக்திக்கு இயன்ற பூஜைகளை குறைவின்றி செய்யலாம்.  கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே அந்த நாராயணனை மனதார நினைத்து நம்முடைய வேண்டுதலை கூறி வணங்கலாம்.

இன்றைய தினம் விரத நாட்களில் செய்யக்கூடாத செயல்களை தவிர்க்க வேண்டும். எனவே அரிதான இந்த வாய்ப்பினைத் தவற விடாமல் இந்த விரதத்தை கடைபிடிப்பதன் மூலம் மகிழ்ச்சியும் செல்வ செழிப்பும் வளமான வாழ்க்கையும் அமையும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow