வெயிலில் வாடும் மக்கள்.. வெப்ப அலையால் வலிப்பு வரலாம் கவனம்.. தப்பிக்க பொதுசுகாதாரத்துறை அட்வைஸ்

Apr 25, 2024 - 17:51
வெயிலில் வாடும் மக்கள்.. வெப்ப அலையால் வலிப்பு வரலாம் கவனம்.. தப்பிக்க பொதுசுகாதாரத்துறை அட்வைஸ்

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த வேளையில், வெயிலின் பாதிப்புகளில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது தொடர்பாக பொதுசுகாதாரத்துறை சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. பல ஊர்களில் 105 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. 5 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  

மக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வது தொடர்பாக பொதுசுகாதாரத்துறை சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில், "சுற்றுப்புற வெப்பநிலை மனித உடலின் சராசரி வெப்பநிலையை விட அதிகமாகும்போது உடலில் வியர்வை மற்றும் தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லுதல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றி மனித உடல் சராசரி வெப்பநிலைக்கு வருகிறது.

கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும்போது உடலில் உப்புச்சத்து மற்றும் நார்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

கோடை வெப்பத்தால் பச்சிளம் குழந்தைகள், சிறு வயது குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் அதிகளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்களை எவ்வாறு தடுக்கலாம் என்றால், தாகம் இல்லை என்றாலும், அதிகளவு நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும். அதிகளவில் மோர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு, ORS உப்புக்கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும்.

பயணத்தின்போது குடிநீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். திறந்தவெளியில் வேலை செய்யும்போது தலையில் பருத்தி துணி அல்லது துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும்.

சூரிய ஒளி நேரடியாக படும் ஜன்னல் மற்றும் கதவுகள் ஆகியவற்றை திரைச்சீலைகளால் மூட வேண்டும். இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வருமாறு ஜன்னல்களை திறந்துவைத்துக் கொள்ளலாம். குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். வெளியில் வேலை செய்பவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும், தலையில் துண்டு அணிந்து கொள்ள வேண்டும், பருத்தி ஆடைகளை தளர்வாக அணிந்து கொள்வது நல்லது, களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்தவெளியில் வேலை செய்யும்போது களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக வெப்பம் உள்ள அதிகமுள்ள இடத்தில் இருந்து, வெப்பம் குறைவான குளிர்ந்த இடத்திற்கு சென்று, தண்ணீர், எலுமிச்சை சாறு போன்றவற்றை பருக வேண்டும்.

கோடை வெயிலால் பாதிக்கப்பட்டு மயக்கமுற்றவரை முதலில் ஒருபக்கமாக சாய்ந்து படுக்க வைக்க வேண்டும். அடுத்து நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு, சுவாசம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும். உடைகளை தளர்த்தி ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். குளிர்ந்த நீரை உடல் முழுவதும் தொடர்ந்து தெளிப்பதோடு, காற்றோட்ட வசதியும் கிடைக்க வழி செய்ய வேண்டும். மேலும் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் மற்றும் பாரா சிட்டமால் மாத்திரைகளை கொடுக்கக் கூடாது" என பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow