‘ஸ்ட்ரெச் மார்க்ஸ்’ ஏன் ஏற்படுகின்றன? தீர்வு என்ன?  

Feb 3, 2024 - 12:32
Feb 3, 2024 - 12:36
‘ஸ்ட்ரெச் மார்க்ஸ்’ ஏன் ஏற்படுகின்றன? தீர்வு என்ன?  

நமது தோல் விரிவடைவதன் விளைவாக உடலின் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் என்று சொல்லப்படக்கூடிய தழும்புகள் ஏற்படுகின்றன. பிரசவத்துக்குப் பிறகு பெண்களின் வயிற்றில் இந்த ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஏற்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும் இந்த ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஏற்படும். இந்தத் தழும்புகள் ஆபத்தானவையா? இவற்றை குணப்படுத்த முடியுமா? என்பது குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம். ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கான சிகிச்சை குறித்து விளக்குகிறார் சரும நல மருத்துவர் வானதி திருநாவுக்கரசு...   

“இத்தழும்புகளை Steria distensae என்று சொல்வோம். பல்வேறு செயல்பாடுகளால் தோல் விரிவடைவதன் காரணமாகவே இந்த ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஏற்படுகின்றன. ஆண் – பெண் இரு பாலினருமே பருவமெய்தும்போது அவர்களது உடல் எடை கூடி விடும். அப்போது பெண் குழந்தைகளுக்குத் தொடைப்பகுதியிலும், ஆண் குழந்தைகளுக்கு முதுகுப்பகுதியிலும் ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கர்ப்பம் தரித்த பிறகு கர்ப்பக்கால சர்க்கரை நோய் காரணமாகவும், உடல் எடை கூடுவதாலும், அதிக எடையுள்ள குழந்தையை சுமப்பதாலும் வயிறு நன்றாகவே பெருத்து விடும். அதனால் வயிற்றின் தோல்பகுதி நன்கு விரிந்து விடும். எனவே பிரசவத்துக்குப் பிறகு வயிற்றுப்பகுதியில் இத்தழும்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன.

துரிதமாக உடல் பருமனாவதாலும், உடல் எடையைக் குறைப்பதாலும் இத்தழும்புகள் ஏற்படும். உடலில் சில ஹார்மோன் மாற்றங்களின் விளைவாகவும், அளவுக்கதிகமாக ஸ்டீராய்ட் எடுத்துக் கொள்வதாலும் இத்தழும்புகள் ஏற்படுகின்றன. உடற்பயிற்சி செய்கிறவர்களில் பெரும்பாலானோர் மார்பு மற்றும் தோள்பட்டைக்குதான் அதிக வேலை கொடுக்கின்றனர். ஆகவே அவையிரண்டுக்கும் இடைப்பட்ட தோல் அதிகம் விரிவடைவதன் காரணமாகவும் இத்தழும்புகள் ஏற்படுவதைக் காண முடிகிறது.” என்று காரணங்களை விளக்கியவர் இத்தழும்புகளுக்கான சிகிச்சை குறித்துக் கூறுகிறார்.

இத்தழும்புகளைப் போக்க பல வகையான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. அவை அத்தழும்பின் தன்மையையும் நபரையும் பொறுத்து வேறுபடும். எல்லோருக்குமே எல்லாமும் பொருந்தாது. பிரசவத்துக்குப் பிறகு வயிற்றுப் பகுதியில் ஏற்படும் தழும்புகளை எடுத்துக் கொள்வோம். முதலில் அத்தழும்புகள் சிவப்பாக இருக்கும். அதனை Steria Rubara என்று சொல்வோம். அந்த நிலையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் அத்தழும்பைப் போக்க முடியும். அதை அப்படியே விட்டு விட்டால் நாளடைவில் அத்தழும்புகள் வெள்ளை நிறத்தில் மாறி விடும். Steria alba என்கிற அந்த நிலையில் அத்தழும்புகளைப் போக்க அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும். லேசர் சிகிச்சை கூட எடுத்துக் கொள்ள வேண்டி வரலாம். 

ஸ்டீராய்டை உட்கொண்டாலும் சரி, தோலின் மேல் தடவினாலும் சரி அதன் விளைவாக இத்தழும்புகள் ஏற்படும். அதற்காக ஸ்டீராய்ட் கொடியது என்று அர்த்தம் இல்லை. அது ஓர் அருமருந்துதான் என்றாலும் மருத்துவரின் பரிந்துரை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் மட்டுமே அதை எடுத்துக் கொள்வதுதான் சரி. ஸ்டீராய்ட் கலந்த மருந்துகளை எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும், எத்தனை அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். அதை விடுத்து தானாகவே மருந்துக் கடைக்குச் சென்று மருந்து வாங்கித் தடவினால் அதில் ஸ்டீராய்ட் அதிகம் கலந்திருக்குமேயானால் பிரச்னைதான். அப்படியாகத்தடவி தோலில் அரிப்பு மற்றும் தழும்புகள் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்தவர்கள் இருக்கிறார்கள். 

தோலின் உட்புறத்தில் இருக்கும் கொலாஜன் வயதாகும்போது சேதமடையும். இதன் விளைவாகத்தான் முதுமைக்காலத்தில் தோலில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. ஸ்ட்ரெச் மார்க் ஏற்பட்டுள்ள பகுதிகளிலும் இதுதான் நடக்கிறது. தோல் விரிவடைவதன் காரணமாக உள் தோலில் ஏற்படும் பிரச்னைதான் வெளியே நமக்கு தழும்பாகத் தெரிகிறது. ஊசி வழியாக உள் தோலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அத்தழும்புகளைப் போக்க முடியும்.” என்றவரிடம் இத்தழும்புகள் ஏற்படாமல் எப்படிப் பார்த்துக் கொள்வது என்பது குறித்துக் கேட்டதற்கு... 

இத்தழும்புகள் பல்வேறு காரணங்களால் ஏற்படுவதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதன் வழியாக மட்டுமே முற்றிலுமாக இதனைத் தடுக்க முடியாது. இருந்தாலும் இது சார்ந்த விழிப்புணர்வு இருந்தால் பெரும்பகுதி இதனைத் தடுக்க இயலும். கர்ப்பமாக இருக்கும்போது வயிறு சராசரி அளவுக்கும் கூடுதலாகப் பெருத்திருந்தால் மாய்ச்சரைஸர் அல்லது தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைத் தடவி மசாஜ் செய்யலாம். பிரசவத்துக்குப் பிறகு கூட குறைந்த அளவில் தழும்புகள் இருக்கின்றன என்றாலும் இதே முறையைக் கடைபிடிக்கலாம்.

உடல் எடை கூடுதல் அல்லது குறைதல் ஆகிய இரண்டுமே படிப்படியாகத்தான் நிகழ வேண்டுமே தவிர அதி வேகமாக நிகழக்கூடாது. உடல் எடையைக் கூட்ட அல்லது குறைக்க முற்படுகிறவர்கள் இதன் விளைவாக தோல் சார்ந்து ஏதேனும் பிரச்னை வருமா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாத்திரைகளின் பக்க விளைவுகள், தைராய்டு பிரச்னை ஆகியவற்றால் நம்மையும் அறியாமல் உடல் எடை கூடுகிறது என்றால் என்ன செய்வது எனக் கேட்கலாம். நமது உடலில் நிகழும் மாற்றங்களை நாம் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற தழும்புகள் ஏற்படும்போது ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும். ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்கிறவர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே அதிக வேலை கொடுக்காமல் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் சரிசமமாக பயிற்சியெடுக்க வேண்டும்.” என்கிறார் வானதி திருநாவுக்கரசு.    

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow