காவிக் கொடியுடன் ’ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம்.. கல்லறை மீது தாக்குதல்: உ.பி-யில் பரபரப்பு!
உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூரில் உள்ள ஒரு கல்லறையை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று சேதப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வலதுசாரி இந்து அமைப்பினர் , இந்த கட்டிடம் ஒரு கோவிலின் மீது கட்டப்பட்டதாகக் கூறி தாக்குதல் நடத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சதர் தாலுகா பகுதியில் அபு நகரில் இந்த கல்லறை அமைந்துள்ளது. அரசாங்க ஆவணங்களின் அடிப்படையில், இந்த பகுதி தேசிய சொத்து என உள்ளது. ஆனால், வலது சாரி அமைப்பினர் மற்றும் பாஜகவினை சேர்ந்த நிர்வாகிகள் இந்த பகுதியானது சிவபெருமானின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் இருந்த பகுதி இது என வாதிடுகிறார்கள்.
இந்த கட்டமைப்பிற்குள் தாமரை மலர் மற்றும் திரிசூலம் இருப்பதை காரணம் காட்டி இது இந்துகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இடம் எனவும், காலப்போக்கில் இதனை அபகரித்துள்ளனர் எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.
பூஜை செய்ய திட்டமிட்ட வலதுசாரி அமைப்பினர்:
வலது அமைப்பினை சார்ந்த குழுவினர் இன்று அந்த இடத்தில் பூஜை மேற்கொள்ளத் திட்டமிட்டது. இதனைத் தொடர்ந்து, அமைதியினை நிலைநாட்ட மாவட்ட நிர்வாகம் சார்பில் சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றி தடுப்புகளை அமைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று கையில் காவிக்கொடியினை ஏந்திய ஏராளமானோர் கல்லறையைச் சுற்றி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷமிட்டு காவல் தடுப்புகளை மீறி கல்லறையினை சேதப்படுத்த தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
"எங்கள் கோவிலின் வடிவம் ஒரு மசூதியாக மாற்றப்பட்டுள்ளது. சனாதன இந்துக்கள் நாங்கள் இதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். தாமரை மலர்கள் மற்றும் திரிசூலங்கள் போன்ற தெளிவான அறிகுறிகள் உள்ளன. நாங்கள் இங்கு பிரார்த்தனை செய்வோம். வழிபடுவதைத் தடுத்தால் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். எங்கள் மதத்திற்காகப் போராட வேண்டியிருந்தால், நாங்கள் எல்லா வகையிலும் தயாராக இருக்கிறோம் ” என பாஜக மாவட்டத் தலைவர் முகலால் பால் கூறியுள்ளார்.
பஜ்ரங் தளத்தின் ஃபதேபூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் தர்மேந்திர சிங்கும், "நாங்கள் நண்பகலில் இங்கே பிரார்த்தனை செய்வோம். நிர்வாகத்தால் எங்களைத் தடுக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
விஸ்வ இந்து பரிஷத்தின் (VHP) மாநில துணைத் தலைவர் வீரேந்திர பாண்டே, இந்த இடம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கோயில் என்றார். மேலும் "இந்த இடத்திலிருப்பது ஒரு கல்லறை அல்ல. மத அடையாளங்கள், பரிக்ரம மார்க் மற்றும் ஒரு கோயில் கிணறு உள்ளன. ஆகஸ்ட் 16 அன்று ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்களுக்காக அதை சுத்தம் செய்ய விரும்புகிறோம். பத்து நாட்களுக்கு முன்பு நிர்வாகத்திற்கு நாங்கள் தகவல் தெரிவித்திருந்தோம், ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை," என்று பாண்டே கூறினார்.
வரலாற்றை சிதைக்கும் முயற்சி:
முன்னதாக தேசிய உலமா சபையின் தேசிய செயலாளர் மோ நசீம், வலதுசாரி இயக்கங்களின் கருத்தை கடுமையாக கண்டித்தார். வரலாற்றையும், சமூக நல்லிணக்கத்தையும் சிதைக்கும் முயற்சி என்று குறிப்பிட்டார். நசீம் மேலும் கூறுகையில் "இது பல நூற்றாண்டுகளாக உள்ள பழமையான கல்லறை. அந்த இடம் அரசாங்க ஆவணங்களில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது நாம் ஒவ்வொரு மசூதி மற்றும் கல்லறையின் கீழும் கோயில்களைத் தேடப் போகிறோமா?" என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை போன்று, தற்போது ஃபதேபூரில் சதர் தாலுகா பகுதியிலுள்ள கல்லறை மீது தாக்குதல் மேற்கொள்ள வலதுசாரி அமைப்புகள் திரண்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
What's Your Reaction?






