CAA-வுக்கு எதிரான வழக்குகள்... மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 9-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்ட மசோதா கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். அதன்படி, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு, முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துகள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், பௌத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்த நிலையில், இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால் சட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்தது. இதற்கிடையே, கடந்த 11-ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை வெளியிட்டு சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது.
இதற்குப் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்குகளும் தொடரப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மற்றும் கபில் சிபல் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டாது என கூறிவிட்டு, தற்போது விதிகளை அமல்படுத்தியுள்ளார்கள், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் இவ்வளவு அவசரம்? எனவே, இந்த விசாரணையைக் கருத்தில் கொண்டே குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
தொடர்ந்து, வாதிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த சட்டம் எந்தவொரு இந்திய குடிமக்களின் குடியுரிமையையும் பறிக்காது என்றார். மேலும், இந்தச் சட்டம், அண்டை நாடுகளில் இருந்து வரும் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்குகிறது என்றும் கூறினார். இதையடுத்து, குடியுரிமை திருத்த சட்ட விதிகளுக்கு எதிரான மனுக்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை ஏப்ரல் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
What's Your Reaction?