2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ரூ.450 கோடி பறிமுதல்.. நீதிபதி வேதனை

Apr 18, 2024 - 22:02
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ரூ.450 கோடி பறிமுதல்.. நீதிபதி வேதனை

விதிகளை மீறி பதியப்பட்ட வழக்கு விவரங்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த தேர்தலில்  ரூ.450 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்து வேதனை தெரிவித்துள்ளது.

மதுரை உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தனலெட்சுமி  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ,
"கடந்த 2011-ஆம் ஆண்டு வாக்களர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக காவல்துறையினரால், என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. நேற்றைய (17-04-2024) விசாரணையின் போது தமிழக காவல்துறை தரப்பில், "தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 2019-ல் 4349 வழக்குகள், 2021-ல் 8655 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதில், 2500 வழக்குகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் "இந்த வழக்கு 2011-ல் பதியப்பட்டது. தற்போது தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என வாதிடப்பட்டது. அப்போது நீதிபதி "2011-ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்திற்கு தற்போது குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்தால் எவ்வாறு நீதிமன்றம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்? ஏன் இவ்வளவு காலதாமதம் ஆகிறது?

தமிழகத்தில் 10,000-க்கும் மேற்பட்ட  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் பலவற்றில் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் முழு விவரங்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஏன் பதிவு செய்யவில்லை? பதிவு செய்தால் தானே தவறு செய்பவர்களுக்கு பயம் வரும். அவ்வாறு செய்யாததால் தான் ஆண்டுதோறும் பண விநியோகம் மற்றும் பணம் பறிமுதல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் ரூ.450 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என வேதனை தெரிவித்தார். மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குற்ற வழக்குகளின் நிலை குறித்து பதிவு செய்வது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow