ஆஸ்திரேலியா எப்படி தொடர்ச்சியாக உலகக் கோப்பையில் சாதிக்கிறது?
கூலி திரைப்படத்தில் அப்பா செந்தில், கவுண்டமணி குடும்பம் பற்றி, தனது மகனிடம் கண்ணீர் மல்க “அவங்க பரம்பரை அடி கொடுக்குற பரம்பரை... நம்ம பரம்பரை அடி வாங்குற பரம்பரை...” என்று சொல்வார். கிரிக்கெட் உலகில் அப்படி அடிகொடுக்கின்ற பரம்பரையாக ஆஸ்திரேலியாவும் அடி வாங்குகின்ற பரம்பரையாக இந்தியாவும் மாறிவருகின்றன.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2003 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் கங்குலி தலைமையிலான இந்திய அணி கிரிக்கெட் உலகின் அதிசாகச அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. 2023 வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிச் சுற்றில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவிடம் தோற்றது இந்தியா . அந்தத் தோல்விக்குப் பழிதீர்க்க 2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், வழக்கம் போலவே இறுதி ஆட்டத்தில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையைப் பறிகொடுத்தோம். சீனியர் அணிதான் இப்படி என்றால் உதய் சஹாரன் தலைமையிலான அண்டர் 19 அணியும் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை இழந்துவிட்டு பரிதாபத்துடன் நிற்கிறது. இதுவரை 27 முறை ஐசிசி கோப்பைகளை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது: 6 ஒருநாள் உலகக் கோப்பைகள், 4 அண்டர்-19 உலகக் கோப்பைகள், 2 சாம்பியன் டிரோபிகள், 1 டி20 உலகக் கோப்பை, 1 உலக டெஸ்ட் சாம்பியன்சிப், உலகக் கோப்பை போன்ற முக்கியமான போட்டிகளில் ஆஸ்திரேலியா எப்படி தொடர்ச்சியாக வெற்றி பெறுகிறது?
2023 உலகக் கோப்பை இறுதியாட்டத்துக்கு முன்பாக ஐசிசி இணையதளத்திற்கு பேட்டி அளித்த ஸ்டீவ் ஸ்மித், “உலகக் கோப்பையை வெல்வது எங்களுடைய டிஎன்ஏவிலேயே உள்ளது” என்றார். உலகக் கோப்பை போன்ற முக்கியமான போட்டிகளில் குறைவான இலக்கைப் பொத்திப் பாதுகாத்து வெற்றிபெறும் போதோ, இறுதிக் கட்டம் வரை ஆட்டத்தை நகர்த்தி எடுத்திச் சென்று பந்தயம் அடிக்கும் போதோ, ஆஸ்திரேலியாவின் நம்பிக்கைப் பலமடங்காக உயரும் என்பது வரலாறு.
1999-ல் அரையிறுதிக்கு முந்தைய பரபரப்பான ஆட்டத்தில் ஸ்டீவ் வாவின் கேட்சைத் தவறவிட்டார் தென்னாப்பிரிக்காவின் கிப்ஸ். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஸ்டீவ் வா, சதமடித்து ஆட்டத்தை ஆஸ்திரேலியாவின் பக்கம் திருப்பினார். 2023 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. அதே போல, அண்டர் 19 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆஸ்திரேலியா அணியின் தொடர் ஆதிக்கத்துக்கு, வீரர்கள் மேல் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையும் ஒரு காரணம். 2023 உலகக் கோப்பையில், மார்னஸ் லபுஷேன் தொடர்ச்சியாக சொதப்பினார். ஆனால் அவர் திறமையின் மீது நம்பிக்கை வைத்த கம்மின்ஸ் தொடர்ச்சியாக வாய்ப்பளித்தார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக இந்தியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியா, ஆறாவது முறையாக உலகக் கோப்பையை வெல்வதற்கு கைகொடுத்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த அண்டர் 19 உலகக் கோப்பையில், ஆஸ்திரேலியா மிடில் ஆர்டர் பேட்டர் ஹர்ஜாஸ் சிங் சரியாக விளையாடவில்லை. ஆனால், ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்கியது. இறுதி ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்ட ஹர்ஜாஸ் அரைசதம் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிகளுக்கு ஃபீல்டிங்கிற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் ஒரு காரணம். ஃபீல்டிங்கிற்கு என்று ஒரு தொழில்முறை பயிற்சியாளரை முதல்முதலில் நியமித்த அணியும் அதுதான்.
உலகளவில் முதல்முதலாக எதிர்கால தலைமுறை கிரிக்கெட் வீரர்களை வளர்த்தெடுக்கும் விதமாக, கிரிக்கெட் அகாடமியை தொடங்கிய அணியும் ஆஸ்திரேலியாதான். அதேபோல, விளையாட்டு உளவியல் நிபுணரை முதலில் பணிக்கு அமர்த்திய அணியும் அதுதான். கிரிக்கெட் வரலாற்றில் சம்பள உயர்வுக்காக முதல்முதலில் போராடிய அணியும் ஆஸ்திரேலியா தான். இன்று, கிரிக்கெட் வீரர்கள் தகுதிக்குத் தகுந்த வருமானம் ஈட்டி வருவதற்கு சேப்பல் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் போராட்டமும் ஒரு முக்கியக் காரணம்.
இதுதவிர, ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் மட்டுமே ரசிகர்களின் மனம் கவர்ந்த விளையாட்டு என்று கூறிவிட முடியாது. ரக்பி, கால்பந்து ஆட்டங்கள் மீது ரசிகர்களுக்கு பெரிய ஈர்ப்பு உள்ளது. எனவே, ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறித்த அழுத்தம் இல்லாமல் ஆஸ்திரேலிய அணியால் விளையாட முடிகிறது. முக்கியமாக, கிரிக்கெட்டை ஆஸ்திரேலிய வீரர்கள் ரசித்து விளையாடுகின்றனர். அவர்களுக்கு வெற்றி மட்டுமே குறி. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் ரொமான்ஸ் என்பது முற்றிலும் வெறுக்கப்பட்டது என்கிறார் மறைந்த கிரிக்கெட் எழுத்தாளர் பீட்டர் ரோபக்.
ஆஸ்திரேலிய அணித் தேர்வில் லாபிகளுக்கு இடமில்லை. சுயநலமாக, தனிப்பட்ட சாதனைக்காக ஆடும் வீரர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். அவர்கள் எவ்வளவு பெரிய வீரர்கள் என்றாலும் தயவு தாட்சண்யம் கிடையாது. ஃபார்ம் இல்லை என்றால் நடையைக் கட்ட வேண்டியதுதான். கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியாவை போல கிரிக்கெட்டை தொழில்முறையாக வேறு எந்த அணிகளும் அணுகுவதில்லை. ஐசிசியில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா, ஆஸ்திரேலிய அணியிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
What's Your Reaction?