Manjummel Boys OTT Release: மஞ்சும்மல் பாய்ஸ் எப்போ, எந்த ஓடிடியில் ரிலீஸ்ன்னு தெரியுமா..?
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. சிதம்பரம் இயக்கிய இந்தப் படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி, காலித் ரஹ்மான், தீபக் பரம்போல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மினிமம் பட்ஜெட்டில் எந்தவித ப்ரோமோஷனும் எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடி தீர்த்தனர்.
கேரளாவில் இருந்து நண்பர்கள் ஒரு குழுவாக கொடைக்கானலுக்கு டூர் செல்கின்றனர். அப்போது அதில் ஒருவரான ஸ்ரீநாத் பாசி குணா குகையில் தவறி விழுந்துவிட, அவரை அந்த நண்பர்கள் குழு எப்படி காப்பாற்றுகிறது என்பது தான் இப்படத்தின் கதை. உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவான மஞ்சும்மல் பாய்ஸ் வெற்றிக்கு காரணமாக அமைந்தது ‘கண்மணி அன்போடு’ பாடல் தான். கமலின் குணா படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற இந்தப் பாடல் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்.
அதனை மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் எமோஷனலான ஒரு சீனில் வைத்து ரசிகர்களை சிலிர்க்க வைத்திருந்தார் இயக்குநர் சிதம்பரம். ஸ்ரீநாத் பாஸியை அவரது நண்பர்கள் காப்பாற்றும் காட்சியில் கண்மணி அன்போடு பாடலை கச்சிதமாக பயன்படுத்த, மஞ்சும்மல் பாய்ஸ் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக மஞ்சும்மல் பாய்ஸ் ஃபீவர் கோலிவுட் ரசிகர்களை விட்டு வைக்கவில்லை. இதனால் மஞ்சும்மல் பாய்ஸ் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இதனையடுத்து தற்போது அவர்களுக்கு படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. அதன்படி மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மே 5ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகிறது. திரையரங்குகளில் மலையாளத்தில் மட்டுமே ரிலீஸான மஞ்சும்மல் பாய்ஸ், ஓடிடியில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. முன்னதாக இப்படத்தின் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி மஞ்சும்மல் பாய்ஸ் லாபத்தில் ஷேர் தருவதாகக் கூறி 7 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக ஃபைனான்சியர் ஒருவர் வழக்குத் தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?