Visualisation டெக்னிக்கை பயன்படுத்தி துருவ் ஜுரல் சாதித்தது எப்படி?

Feb 28, 2024 - 12:49
Visualisation டெக்னிக்கை பயன்படுத்தி துருவ் ஜுரல் சாதித்தது எப்படி?

ராஞ்சி டெஸ்டில்  துருவ் ஜூரல் ,ஒரு போர்வீரனைப் போல இங்கிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடித்து விளையாடி 90 ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் போக்கை மட்டுமல்ல, இந்த தொடரின் போக்கையே மாற்றியமைத்த இன்னிங்ஸ் என்று இதனை சொல்லலாம். முதல் தர கிரிக்கெட்டில் போதிய அனுபவம் இல்லாத, இதுபோன்ற கடினமான ஆடுகளங்களில் அதிகம் விளையாடாத ஜூரல், எப்படி பேட்டிங்கில் சாதித்தார்? 

நான்காவது நாள் ஆட்ட முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜூரல், "நான் விசுவலைசேசன் (Visualisation) டெக்னிக்கில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன். எந்தவொரு  ஆட்டமாக இருந்தாலும், எனது பயிற்சியை இரண்டு வாரங்களுக்கு முன்பே தொடங்கி விடுவேன். எதிர் அணி பந்துவீச்சை முழுமையாக நான் உள்வாங்கத் தொடங்கி விடுவேன் - யார் எல்லாம் பந்துவீசப் போகிறார்கள், அவர்களை  எப்படி எதிர்கொள்வது.. இப்படி, எதிர் அணி பந்துவீச்சு குறித்த முழு சித்திரத்தை என் மனதில் நான் வரைந்துகொள்வேன்" என்கிறார் ஜூரல்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சாதித்த ஷமார் ஜோசப்பும் விசுவலைசேசன் (Visualisation) டெக்னிக் பற்றி பேசியிருந்தார். சர்வதேச கிரிக்கெட்டின் முதல் பந்திலேயே விக்கெட் எடுப்பேன் என்று தனது சக வீரர்களிடம் ஷாமர் ஜோசப் சொல்லியிருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்து, சொன்னபடியே  தனது சபதத்தை நிறைவேற்றியும் காட்டினார்.  இது எப்படி சாத்தியமாகிறது? விசுவலைசேசன் (Visualisation) என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது?

மனக்கண்ணில் கண்டபடி

விசுவலைசேசன் (Visualisation) என்பதை ஒரு வீரர் களத்தில் நிகழ்ப்போவதை மனதளவில் காட்சிப்படுத்தி, அதற்கு ஏற்ற வகையில் ஆகும் முன்தயாரிப்பு எனலாம். கிரிக்கெட்டில் முக்கிய சூழல்கள் குறித்த ஆழமான அனுபவங்களை  நேரடியாக அத்தகைய களத்தில் பங்குபெறாவிட்டாலும் கூட 'விசுவலைசேசன்' மூலமாக ஒருவரால் பெற முடியும் என்கிறார் ஜெர்மி ஸ்நாப். இவர் நிறைய ஐபிஎல் அணிகளுக்கு ஸ்போர்ட்ஸ் சைக்காலஜிஸ்டாக பணியாற்றியவர். 

அழுத்தம் மிகுந்த சூழல்களை ஒரு வீரர் முன்னதாகவே 'விசுவலைசேசன்' காரணமாகப் பயிற்சி எடுத்துள்ளதால் அத்தகைய சூழல்களை களத்தில் சந்திக்கும் போது நேர்மறையாக எதிர்கொள்ள முடியும் என்பது அவருடைய வாதம். கிரிக்கெட் ஆட்டத்துக்கு தயாராகும் முன் பெரும்பாலான வீரர்கள் ஏதோவொரு விதத்தில் 'விசுவலைசேசன்' ஏதோவொரு வடிவத்தில் டெக்னிக்கை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹேடன், ஆட்டம் நடப்பதற்கு முந்தைய நாள் மாலை ஆடுகளத்திற்கு சென்று அமர்ந்து தியானம் செய்வதை தனது 'விசுவலைசேசன்' பானியாக வைத்திருந்தார். அடுத்த நாள் தான் விளையாடப் போகும் களத்தில் அமர்ந்து தனக்கு எதிராக வீசப்போகும் பந்து வீச்சாளர்கள், அவர்களின் உத்திகள், பந்துவீச்சு கோணங்கள், ஆட்டமிழக்க வாய்ப்புள்ளது தருணங்கள் குறித்தெல்லாம் மனதில் காட்சிப்படுத்திப் பார்ப்பது அவருடைய வழக்கம். இதன்மூலம், அடுத்த நாள் காலை பேட்டிங் செய்ய களத்துக்குள் செல்லும் போதும் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போதும் பதற்றம் எதுவுமில்லாமல் தன்னால் விளையாட முடிந்தது என்கிறார் ஹேடன்.

லாராவின் தரிசனம்

கிரிக்கெட் உலகின் ஆகச் சிறந்த இன்னிங்ஸாக கருதப்படும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்படாஸ் சதத்தின் (153*) பின்னணியில் இருந்தது இந்த 'விசுவலைசேசன்' டெக்னிக்தான். 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆசிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, நான்காம் நாள் ஆட்ட முடிவில் 85 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. அணியின் ஒரே நம்பிக்கையான கேப்டன் லாரா, 2 ரன்களுடன்  களத்தில் இருந்தார். லாராவை ஊக்கப்படுத்தும் விதமாக அணியின் உளவியல் நிபுணர் ரூடி வெப்ஸ்டர் அவரிடம் ஒரு யோசனையை முன்வைக்கிறார். ஆட்டத்தை வென்றுவிட்டு அதன் வெற்றியை கொண்டாடுவதாக விசுவலைஸ் (Visualise) செய்து பார்க்குமாறு கூறுகிறார். களத்தில் மறுநாள் என்னவெல்லாம் நடக்க வாய்ப்புள்ளதோ அவற்றையெல்லாம் மனதில் ஒத்திகை செய்து பார்க்கும்படி லாராவை அறிவுறுத்துகிறார். 

தனது ஆகச் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்த இன்னிங்ஸுக்கு பிறகு லாரா சொன்னார்: 'களத்தில் நிகழ்ந்த அனைத்தும் நான் முன்னர் கற்பனையில் ஒத்திகை செய்தது போலவே அமைந்தன.'

இந்திய சுவர் டிராவிட், யுனிவர்சல் பாஸ் கெய்லும் ஆட்டத்துக்கு முன்னதாக நிழற் பயிற்சி (Shodow Practice) மூலம் விசுவலைஸ் (Visualise) செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம், தான் வீசும் ஒவ்வொரு பந்தையும் ஓடிவருவதற்கு முன்பாகவே விசுவலைஸ் (Visualise) செய்துப் பார்ப்பவராக இருந்தார். குறிப்பாக ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் போது, பேட்ஸ்மேனை தொடர்ச்சியாக அவுட் ஸ்விங் பந்துக்கு 'செட்' செய்து இன் ஸ்விங் மூலம் 'போல்ட்' அல்லது LBW மூலம் விக்கெட் எடுப்பதை மனதில் ஓட்டிப் பார்ப்பாராம். இதனால், நேர்மறை சிந்தனையுடன் ஒவ்வொரு பந்தையும் தன்னால் வீச முடிந்தது என்கிறார் வாசிம்!

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிலென் மெக்ரா, தான் கைப்பற்றிய விக்கெட்டுகளை இப்போது கேட்டாலும் தன்னால் வரிசை கிரமமாக எழுத முடியும் என்கிறார். இந்திய சுழற்பந்து வீச்சு மேதை அனில் கும்ப்ளேவிடம்  'விசுவலைசேசன்' குறித்து கேட்டபோது, எதிரணி பேட்டிங் வரிசைக்கு தனித்தனியாக மனதில் களத்தடுப்பு அமைத்து ஆட்டமிழக்க செய்து ஒத்திகை பார்ப்பேன் என்கிறார்.

11 முட்டாள்கள் விளையாடுவதை 11,000 முட்டாள்கள் ரசிக்கும் விளையாட்டு என கிரிக்கெட்டை ஜார்ஜ் பெர்னாட்ஷா கிண்டல் அடித்தார். உண்மையில், அவ்வளவு மேலோட்டமான ஆட்டமா கிரிக்கெட்? கிரிக்கெட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு அறிவியல் முறைமைகள் பயன்படுத்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. அவற்றைத் காட்சிப்படுத்துதல் (Visualisation) முக்கியமான ஒன்று.

மேலும் படிக்க : 

https://kumudam.com/Shreyas,-Ishaan-Kishan-who-came-back-to-the-field

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow