அசுர வளர்ச்சி.. அமைச்சராக உதயநிதி பதவியேற்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பு! செயல்பாடுகள் என்னென்ன?

அடுத்ததாக துணை முதல்வர், திமுகவின் எதிர்காலம் என்றெல்லாம் அவரது ஆதரவாளர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Dec 15, 2023 - 17:25
Dec 15, 2023 - 17:57
அசுர வளர்ச்சி.. அமைச்சராக உதயநிதி பதவியேற்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பு! செயல்பாடுகள் என்னென்ன?

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த ஓராண்டு காலத்தில் அவரின் செயல்பாடுகள் பற்றி காணலாம்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பேரனும், தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் ஒரு சினிமா தயாரிப்பாளராகவும், நடிகராகவும் மட்டுமே மக்களால் 2019 ஆம் ஆண்டு வரை அறியப்பட்டு வந்தார். தாத்தா, தந்தை, அத்தை, பெரியப்பா தொடங்கி குடும்பத்தில் பலரும் அரசியலில் மாபெரும் ஆளுமையாக திகழ்ந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் 2019 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி திமுக இளைஞர் அணி செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அவரின் கீழ் அக்கட்சியின் இளைஞரணி புத்துணர்ச்சி பெற்றது என்றே சொல்லலாம். 

2018 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பின் தீவிர அரசியலுக்குள் களம் கண்டார் உதயநிதி. அவருக்கு அரசியல் ஆசை இருந்ததை காட்டிலும், உதயநிதி அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார் என்றே சொல்லலாம். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னணி திமுக ஆளுமைகளை விட உதயநிதி செய்த செங்கல் பிரச்சாரம் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற காரணமாக அமைந்தவற்றில் ஒன்றாக அமைந்தது. 

தொடர்ந்து திமுகவின் இளைஞரணி செயலாளராக சிறப்புடன் பணியாற்றி வந்த உதயநிதி, 2021 ஆம் ஆண்டு தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிகேணி தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முதல் முறையாக பதவியேற்றார். அன்று பதவியேற்ற அமைச்சரவையில் உதயநிதி பெயர் இடம் பெறாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் திமுக மீது வாரிசு அரசியல் முத்திரை அழுத்தமாக குத்தப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விளக்கம் கொடுத்தார்.

இதற்கிடையில் திமுக ஆட்சிக்கு வந்த பின், உதயநிதியின் பிம்பம் வேறு ஒரு பாதையில் செல்ல தொடங்கியது. இதனால் அரசியலில் வளர்ந்து வரும் நபராக உள்ள உதயநிதிக்கு திமுகவின் முன்னணி தலைவர்களை விட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உதயநிதி புகைப்படம் இல்லாமல் திமுகவின் எந்த நிகழ்ச்சிகளும் இல்லை என்னும் அளவுக்கு அவரது அரசியல் வாழ்வு ஏற்றம் கண்டது. உதயநிதி ஸ்டாலினும் படங்களில் நடித்துக் கொண்டே தான் இன்னும் அரசியல் பாடம் கற்றுக் கொண்டு இருக்கும் நபர் தான் என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார். 

எம்.எல்.ஏ.வாகவும் தொகுதி மக்களை கவர தொடங்கினார். இப்படியான நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. அமைச்சர்களும் வெளிப்படையாகவே முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தான் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றார். பதவி பிரமாணம் முடிந்ததும் தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன் என்றும், விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதிலடி கொடுப்பேன் என பேட்டியும் அளித்தார். 

தொடர்ந்து பிப்ரவரி மாதம் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது நீட் தேர்வு விலக்கு குறித்து வலியுறுத்தியதாக தெரிவித்தார். பின்னர் ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தொடரில் பேசிய உதயநிதி, ‘வடக்கே இருந்து வந்து இங்கு யாரும் வென்ற வரலாறு கிடையாது’ என பேசி அதிர வைத்தார்.
பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் குறிப்பிட்ட திமுக பிரமுகர்கள் ஊழல் மூலம் 1.31 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டினார். அதில் உதயநிதி பெயரும் இடம் பெற்றிருந்தது. இதனால் அண்ணாமலை மீது ரூ. 50 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். 

அதேசமயம் எம்.எல்.ஏ.வாக இருந்த நேரத்தில் சினிமாவில் தீவிரமாக நடித்து வந்த உதயநிதி, அமைச்சரான பிறகு மாமன்னன் படத்துடன் சினிமாவில் இருந்து விலகினார்.  மேலும் அவர் விளையாட்டுத்துறை அமைச்சரான பின் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடவர் ஆசிய ஹாக்கிப் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெற்றது. 

இந்நிலையில் தான் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் உதயநிதி பேசிய கருத்துகள் இந்திய அளவில் சர்ச்சையாகி ட்ரெண்டானது. உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி விலை நிர்ணயம் செய்தார் அயோத்தி சாமியார். 

இப்படி பல சர்ச்சைகளுக்கு நடுவே தன்னுடைய ஆளுமையை அரசியல் களத்தில் வளர்த்து வருகிறார். குறிப்பாக நீட் விலக்கு கோரி கையெழுத்து இயக்கம், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததது பற்றி செங்கல் காட்டிய அவர், நீட் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக நிர்ணயித்தபோது முட்டையை காட்டி சம்பவம் செய்தார். உதயநிதியின் வளர்ச்சி வழக்கம்போல விமர்சனத்திற்கு உள்ளானாலும் மிக குறுகிய வருடங்களிலேயே மக்கள் மனதில் தனக்கென தனியிடம் பிடித்த அவரை, அடுத்ததாக துணை முதல்வர், திமுகவின் எதிர்காலம் என்றெல்லாம் அவரது ஆதரவாளர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow