சாராய பாக்கெட்டுக்களை சாலையில் கொட்டி பொதுமக்கள் மறியல்
சாராயம் விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்றும் கோரிக்கை
மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து சாராய பாக்கெட்டுக்களை சாலையில் கொட்டி பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்புடன் பரபரப்பும் ஏற்பட்டது.
மயிலாடுதுறை நகராட்சி 1வது வார்டு மற்றும் திருவிழந்தூர் ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து போலீசார் ஆதரவுடன் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாகவும், இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் நகராட்சி கவுன்சிலர் ஜெயந்திரமேஷ் திருவிழந்தூர் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் சுபாஷ் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் மாமூல் பெற்றுக்கொண்டு அந்த பகுதிகளில் பாக்கெட் சாராயம் விற்க அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பூம்புகார்-கல்லணை சாலையில் பொட்டவெளி மெயின்ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாராய பாக்கெட்டுகள் மற்றும் காலி சாராய பாக்கெட்டுகள் ஆகியவற்றை சாலையின் குறுக்கே கொட்டி போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரிடம் ‘புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றபடி மக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். சாராயம் விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் மயிலாடுதுறை தாசில்தார் சபீதாதேவி சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலைமறியல் போராட்டத்தால் பூம்புகார்-கல்லணை சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-விவேக் ஆனந்த்
What's Your Reaction?