நீதியரசர் சந்துருவுக்கு குறுகிய பார்வை; தேர்தல் நடந்தால் ஜாதி வளரும் - அண்ணாமலை கருத்து
கள்ளர் சமுதாயத்தின் சீர் மரபுப் பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறைக்கு கீழ் கொண்டுவர வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
பள்ளி பாடப் புத்தகங்கள் காவி மயமாகுவதாக சந்துரு கூறினால் அவருடைய குறுகிய பார்வையை தான் காட்டுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமை அலுவகமான கமலாலயத்தில் மைய குழு கூட்டம் நிறைவுப் பெற்றதை அடுத்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “முழுமையாக ஆறு மணி நேரம் மையக்குழு கூட்டம் இன்று நடந்தது. 39 தொகுதிகளிலும் நடு தேர்தலில் பெற்ற வாக்குகளை பற்றி விவாதிக்க கூடிய குழுவாக அமைந்தது. யார் யார் தேர்தலில் வேலை செய்தார்கள் குற்றச்சாட்டுகள் என எல்லா கருத்துக்கள் பற்றியும் குழுவில் ஆலோசனை செய்யப்பட்டது.
விஜய் அதிமுகவில் கூட்டணி வைக்க வேண்டுமென செல்லூர் ராஜு இறைவனிடம் வேண்டிக் கொண்டுள்ளார். அதிமுக புரட்சித்தலைவி அம்மா வழி நடத்திய கட்சி ஆனால் இப்போது அங்குள்ள தலைவர்கள் கட்சியை விற்பனை செய்து கொண்டு உள்ளார்கள்.
விஜய் அதிமுகவை காப்பாற்றுவார் என செல்லூர் ராஜு கூறுவது செல்லூர் ராஜூக்கு அதிமுகவின் தலைமையின் மீது சந்தேகம் ஏற்பட்டதை விளக்குகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக வேண்டாம் என பாஜகவில் கூட்டணி வைத்தார்கள். அதிமுகவில் உள்ளவர்கள் அவர்களது கட்சியை எவ்வாறு வளர்க்க வேண்டும் என சிந்திக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பாஜக இதை செய்கிறார்கள் அதை செய்கிறார்கள் எனக் கூற வேண்டாம்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதித்துள்ளதாக விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடவில்லை என கூறும் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு இடைத்தேர்தலிலும் போட்டியிடாமல் இருந்திருக்க வேண்டும். இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்பது அதிமுகவின் விருப்பம். ஆனால் சட்டம் ஒழுங்கை காரணமாக கூறியிருக்கக் கூடிய கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது. திமுகவின் மறைமுக பி டீமாக அதிமுகதான் செயல்படுகிறது” என்றார்.
மேலும், தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மாணவர்களிடையே சாதிய மோதல்கள் அதிகரித்து வரும் நிகழ்வுகளை தடுத்திட, தமிழக அரசுக்கு ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அளித்த பரிந்துரைகளை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து கூறிய அண்ணாமலை, “தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு சார்ந்து இருக்க கூடிய ஜாதி எண்ணங்கள் வரக்கூடாது என்பதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு ஆய்வறிக்கையை நேற்று தாக்கல் செய்துள்ளார். ஆய்வறிக்கையில் ஏற்றுக் கொள்ள முடியாத பல விஷயங்கள் உள்ளது.
கள்ளர் சமுதாயத்தின் சீர் மரபுப் பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறைக்கு கீழ் கொண்டுவர வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜாதி தன்மையோ ஜாதியை அடையாளமோ வரக்கூடாது என்றால் வேறு விதத்தில் அதை சரி செய்ய வேண்டும் ஆனால் பள்ளியில் இதுபோன்று திட்டங்களை எடுத்து வரக்கூடாது.
பள்ளி பாடப் புத்தகங்கள் காவி மயமாகுவதாக சந்துரு கூறினால் அவருடைய குறுகிய பார்வையை தான் காட்டுகிறது. அதே பாட புத்தகங்களில் திராவிட எண்ணங்களும் உள்ளது. பள்ளிக்கூடங்களில் தேர்தல் என்பது கூடவே கூடாது. பள்ளிக்கூடங்களில் தேர்தல் நடந்தால் ஜாதி வளரத்தான் செய்யும்” என்றார்.
What's Your Reaction?