கொரியர் மோசடி... ரூ.2.3 கோடியை பறி கொடுத்த ஐடி நிறுவன சிஇஓ...

Feb 21, 2024 - 18:21
கொரியர் மோசடி... ரூ.2.3 கோடியை பறி கொடுத்த ஐடி நிறுவன சிஇஓ...

கொரியரில் போதைப்பொருட்கள் வந்துள்ளதாக கூறி பெங்களூருவை சேர்ந்த ஐடி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியிடம் மர்ம நபர்கள் நூதன முறையில் ரூ.2.3 கோடி ஆன்லைனில் மோசடி செய்துள்ளனர்.

பெங்களூரு, சிவி ராமன் நகரைச் சேர்ந்த ஐடி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஒருவருக்கு கடந்த 6 ஆம் தேதி, காலை அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பை எடுத்த போது, தாங்கள் மும்பையில் உள்ள கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம், உங்களது பெயரில் வெளிநாட்டுக்கு பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பார்சலில், சட்ட விரோத போதைப்பொருட்களும், அதனுடன் உங்களது பாஸ்போர்ட் மற்றும் ஆடைகள் இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த அழைப்பில் பேசிய நபர் தலைமை நிர்வாக அதிகாரியின் பெயர், ஆதார் எண், செல்போன் என் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களையும் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தலைமை நிர்வாக அதிகாரி செய்வதறியாது தவித்துள்ளார். தொடர்ந்து மும்பையில் உள்ள அந்தேரி போதைப்பொருள் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி குற்றப்பிரிவு டிசிபி பாலாஜி என்ற பெயரில், தலைமை நிர்வாக அதிகாரியை தொடர்பு கொண்ட  மற்றொரு நபர், நீங்கள் மும்பைக்கு வரவேண்டும் என்றும், இல்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அவரை நம்ப வைக்க ஸ்கைப் வீடியோ காலில் காவல் நிலையத்தை காட்டி, தாங்கள் கூறுவது உண்மையென நம்பவும் வைத்துள்ளனர். இந்த விவரத்தை குடும்பத்தினரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கூறிய அந்த கும்பல், இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க தலைமை நிர்வாக அதிகாரியிடம் பணம் கேட்டுள்ளனர்.

இதையடுத்து பிப்ரவரி 7 முதல் 14 தேதி வரை மோசடி நபர்கள் வழங்கிய 8 வெவ்வேறு கணக்குகளில் மொத்தம் ரூ.2.3 கோடியை, அந்த தலைமை நிர்வாக அதிகாரி பரிமாற்றம் செய்துள்ளார். இதை தொடர்ந்து செல்போன் அழைப்புகளும், ஸ்கைப் கால்கள் திடீரென நிறுத்தப்பட்டன. இதையடுத்து தன்னிடம் பண மோசடி நடத்தப்பட்டுள்ளதை உணர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி, உடனடியாக பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow