"ஜிஎஸ்டியால் நன்மைதான்" - மு.க.ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நிதி இழப்பு ஏற்படுவதாக குற்றம்சாட்டிய தமிழ்நாடு அரசுக்கு, ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நன்மை தான் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்திருக்கிறார்.
அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு, பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் (30-06-2022) முதல் தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு நிறுத்தியதாகவும், இதனால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு சிறப்புத் திட்டங்களை மத்திய அரசு தருவதில்லை எனவும் கூறியிருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது எக்ஸ் தளப்பக்கத்தில்,
"உண்மையில், ஜி.எஸ்.டி.,யால் மாநிலங்களுக்கு நன்மை தான் ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.,க்கு முன் 2012-2015 காலக்கட்டத்தில் மாநிலங்களின் சராசரி வருவாய் வளர்ச்சி 9 சதவீதமாக இருந்தது. ஜி.எஸ்.டி.,க்கு பின் 14.80 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஜி.எஸ்.டி.,க்கு முன் வரிவருவாய் வளர்ச்சி ஆண்டுக்கு 12.30 சதவீதமாக இருந்ததாக, தமிழக வணிக வரித்துறை தெரிவித்துள்ளதாக நாளிதழில் வாசித்தேன். ஜி.எஸ்.டி.,க்கு பின் தமிழகத்தின் வரி வருவாய் வளர்ச்சி 14.80 சதவீதம் என்றாலும், தமிழக அரசுக்கு லாபம் தானே!
இது தவிர, 'டேக்ஸ் பாயன்ஸி' எனப்படும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப வரி வருவாய் வளர்ச்சி, ஜி.எஸ்.டி.,க்கு பின் செம்மையாகி உள்ளது. முன்பு பொருளாதார வளர்ச்சியை விட மெதுவாகத்தான் வரி வருவாய் வளர்ந்து வந்தது. இப்போது பொருளாதார வளர்ச்சியைவிட வேகமாக வளர்கிறது" என விளக்கம் அளித்துள்ளார்.
What's Your Reaction?