சமாஜ்வாதிக்கு 63... காங்கிரஸுக்கு 17... உ.பி.யில் இந்தியா கூட்டணி உறுதி

Feb 21, 2024 - 18:31
சமாஜ்வாதிக்கு 63... காங்கிரஸுக்கு 17... உ.பி.யில் இந்தியா கூட்டணி உறுதி

மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடனான கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் , சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தொகுதி பங்கீட்டை அறிவித்துள்ளார்.

விரைவில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு,  காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதனிடையே மேற்குவங்கம், டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், உள்ளிட்ட மாநிலங்களில் ஆளும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்ட மாறுபட்ட கருத்துகளால் தனித்து போட்டியிடுவதாக அந்தந்த மாநில தலைவர்களும், முதலமைச்சர்களும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில்  இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி 63 தொகுதிகளிலும் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு வெறும் 11 தொகுதிகள் ஒதுக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், மக்களவைத் தேர்தலில், சமாஜ்வாதி - காங்கிரஸ் இடையேயான கூட்டணி உறுதி என்றும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக வெளியேற்றப்படும் எனவும் அகிலேஷ் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய கூட்டணியில் முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தில் மட்டும் சமாஜ்வாதி - காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow