40 இடங்களில் ஐ.டி.ரெய்டு.. கட்டு கட்டாக சிக்கிய பணம், தங்கம் பறிமுதல்.. ரூ.400 கோடி வரி ஏய்ப்பு.. அதிர்ந்த தமிழகம்
தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் 40 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.400 கோடி மதிப்பில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் அவர்களுக்கு உதவும் பணக்காரர்கள் ரகசியமாக பணம் வைத்திருப்பதாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் சென்னையில் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் முக்கிய நபராக சென்னை அடையாறில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் என்பவரது வீட்டிலும், அபிராமபுரம் பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற குடிநீர் வடிகால் வாரிய இணை தலைமை பொறியாளர் தங்கவேலுவின் வீட்டிலும் கடந்த 3 நாட்களாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனை இன்று நிறைவடைந்தது.
இதேபோல், நெல்லை பாளையங்கோட்டை மகாராஜாநகரில் உள்ள திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர்கல்லூரி அருகேயுள்ள நெடுஞ்சாலைத் துறை அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகனின் அலுவலகம் மற்றும் விஜயநாராயணத்தில் உள்ள வீட்டிலும் சோதனை நடந்தது. கோவை, அவிநாசி சாலை லட்சுமி மில்ஸ் பகுதி அருகே அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமான அவிநாசி ரவி என்பவரது அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகரம் செஞ்சி சாலையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகி செந்தில்குமார் என்பவரின் நகைக்கடை, மற்றும் வந்தவாசி சாலையில் பிரபல நகைக்கடை ஆகியவற்றில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக நடத்தி வந்த சோதனை நிறைவடைந்தது. இதில் அரசு ஒப்பந்ததாரர்கள் 8 பேரின் வீடுகளில் நடந்த சோதனையில் ரூ. 5 கோடி பணம், ரூ. 5 கோடி மதிப்பிலான தங்கம் ஆகியவற்றை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சுமார் ரூ. 400 கோடி வரை வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?