சிறப்பு நீதிமன்றத்தில் திமுக எம்.பி.க்கு வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை நகல்

குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது

Nov 24, 2023 - 15:07
Nov 24, 2023 - 15:56
சிறப்பு நீதிமன்றத்தில் திமுக எம்.பி.க்கு வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை நகல்

சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான திமுக எம்.பி. கௌதம சிகாமணிக்கு குற்றப்பத்திரிகை நகல்  வழங்கப்பட்டது.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக உள்ள க.பொன்முடி, கடந்த 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சியில், கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ள இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடி, கௌதம சிகாமணி ஆகியோர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியதுடன், இருவரிடமும் தனித்தனியாக விசாரணையும் நடத்தினர்.

அதன்முடிவில், செம்மண் அள்ளியதில் முறைகேடு செய்ததன் மூலம் கிடைத்த பணத்தை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக கூறி, அதுதொடர்பான ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பணம் பறிமுதல் செய்ததுடன், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடுகளை முடக்கியும் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்தது.

இந்த சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு வழக்கில் கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. கௌதம சிகாமணி, உறவினர் கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ் பிஸ்னஸ் கவுஸ் நிறுவனம் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 

இதையடுத்து இந்த வழக்கை கோப்புக்கு எடுக்கப்பட்டு, கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.குற்றம்சாட்டப்பட்ட கௌதம சிகாமணி, கே.எஸ்.ராஜ மகேந்திரன் உள்ளிட்ட ஐவரும் நேரில் ஆஜராகினார்.இதையடுத்து குற்றப்பத்திரிக்கை நகல்களை அவர்களுக்கு வழங்கிய நீதிபதி, வழக்கின் விசாரணையை டிசம்பர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow