சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு-மத்திய அரசு அதிகாரிக்கு மூன்று ஆண்டுகள் சிறை
இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் மத்திய அரசு அதிகாரிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மத்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறையின் குடியுரிமை பாதுகாப்பு அலுவலகம் சென்னை அசோக் நகரில் இயங்கி வருகிறது. வெளிநாடுகளுக்கு சமையல் வேலை உட்பட சிறு பணிகளுக்கு ஆட்களை அனுப்ப, தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இந்த அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும்.
கடந்த 2007- 2009ம் ஆண்டுகளில் புலம்பெயர்ந்தோர் பாதுகாவலராக பணிபுரிந்த, இந்திய வருவாய் பணி அதிகாரி சேகர், குடியுரிமை சான்றுக்கு அனுமதி வழங்க, 2 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றுள்ளதாகவும், அத்தொகையை சொத்துக்கள் வாங்க பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
சேகர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தனியார் டிராவல் ஏஜெண்ட் அன்வர் ஹுசைன் ஆகியோருக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தனசேகரன், குற்றம் சாட்டப்பட்ட சேகர் மற்றும் அன்வர் ஹுசைன் மீதான குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக கூறி, இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
What's Your Reaction?