இறைவன் மிகப் பெரியவன்.. வசமாய் சிக்கிய ஜாபர் சாதிக்.. இனிமேல் வேலையில்லை.. அறிக்கை விட்ட அமீர்..!

Feb 26, 2024 - 22:00
இறைவன் மிகப் பெரியவன்.. வசமாய் சிக்கிய ஜாபர் சாதிக்.. இனிமேல் வேலையில்லை.. அறிக்கை விட்ட அமீர்..!

தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கு குறித்து வரும் செய்திகள் அனைத்தும் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று இயக்குநரும், நடிகருமான அமீர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில், போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய கும்பலுக்கு பின்னணியில் சினிமா திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் இருப்பது விசாரணையில் அம்பலானது. சுமார் ரூ.2,000 கோடி வரை கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த விவகாரம் கோலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஜாபர் சாதிக் திமுகவில் இருந்ததால் அண்ணா அறிவாலயத்தையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

இதனால் அவர் கட்சியில் இருந்து திமுக தலைமை நீக்கியது. போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் தம்மை போலீஸ் தேடுவதால் ஜாபர் சாதிக் தலைமறைவாக உள்ளதால் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நியைில் இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2 நாட்களாக, எனது “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று அமீர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 22-ம் தேதி நான் “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை.

எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.! நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கு அறிவர்.

அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். முழுவிபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன். “இறைவன் மிகப் பெரியவன்” என்று இயக்குநர் அமீர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow