சிஏ படிக்க ஆசை.. என்னை தாக்கியவர்களும் முன்னேற வேண்டும்.. நாங்குநேரி சின்னதுரையின் பெரிய மனசு

சென்னை: சக மாணவர்களால் சாதிய பாகுபாடு காரணமாக தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னதுரைக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பேனா வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். சிஏ படிக்க விரும்புவதாக கூறியுள்ளார் மாணவர் சின்னதுரை

May 7, 2024 - 14:32
சிஏ படிக்க ஆசை.. என்னை தாக்கியவர்களும் முன்னேற வேண்டும்.. நாங்குநேரி சின்னதுரையின் பெரிய மனசு

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முனியாண்டி அம்பிகாபதி தம்பதிகளின் மகன் சின்னதுரை. நாங்குநேரி அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.  பள்ளி மாணவர்களுக்கிடையே சாதிய ரீதியான மோதல் போக்கு ஏற்படவே, ஒரு வாரம் பள்ளிக்கு செல்லாமல் அவர் இருந்துள்ளார்.  

இதை தொடர்ந்து பள்ளிக்கு சென்ற சின்னதுரையிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்திய போது பள்ளி மாணவர்கள் சிலர் தன்னை சாதி ரீதியாக தாக்குவதாக அவர் கூறியுள்ளார். குறிப்பிட்ட மாணவர்களின் விவரங்களையும் அவர் ஆசிரியர்களிடம் கூறியதால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள்,  சின்னதுரையை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக  வெட்டினர்.  வீடு வாசல் முழுவதும் ரத்தமானது. 

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. மாணவர்களிடையேயான சாதி வெறி குறித்து ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. சாதி வெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, காலாண்டு தேர்வு நடைபெற்றது. மருத்துவமனையில் இருந்தவாரே காலாண்டு தேர்வினை எழுதினார். 

முழுமையான உடல்நலம் பெறாததால் உதவியாளர் மூலமாக மாணவர் +2 பொதுத்தேர்வை எழுதியிருந்தார். இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர் சின்னதுரை பிளஸ் 2 தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். 

இதனையடுத்து சின்னதுரையை உடனடியாக தொடர்பு கொண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து கூறினார். சின்னதுரையின் மேற்படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் இன்றைய தினம் நாங்குநேரி சின்னதுரை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சின்னதுரைக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பேனா வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். 

பிகாம் முடித்து விட்டு சிஏ படிக்க விரும்புவதாக கூறியுள்ளார் மாணவர் சின்னதுரை. அவரது உயர்கல்விக்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என முதலமைச்சர் உறுதி  அளித்துள்ளார். 

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் சின்னதுரை, தன்னை வெட்டி தாக்குதல் நடத்திய மாணவர்களும் வாழ்வில் நன்கு படித்து முன்னேற வேண்டும் என்று கூறினார். இது போன்ற சம்பவங்கள் சமூகத்தில் இனி நடக்ககூடாது என்று தெரிவித்த சின்னதுரை இப்போது எனக்கு எந்த அச்சமும் இல்லை என்றார். பி.காம் படித்து முடித்து பின்னர் சிஏ படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்
முதல்வர் வாழ்த்து தெரிவித்து என்ன படிக்க விரும்பினாலும் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow