திருப்பதி லட்டு சர்ச்சை: “18 முறை அது நடந்துச்சு...” – மௌனம் கலைத்த ஜெகன்!

திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. 

Sep 20, 2024 - 18:07
திருப்பதி லட்டு சர்ச்சை: “18 முறை அது நடந்துச்சு...” – மௌனம் கலைத்த ஜெகன்!

ஆந்திர மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளில் கொழுப்புகள் பயன்படுத்தப்பட்டதாகவும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து இது நடந்துவருவதாகவும் தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இது ஆந்திராவைத் தாண்டி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, நெய்யின் மாதிரியை ஆய்வு செய்ததில் மீன், பன்றி, மாட்டுக் கொழுப்பு எண்ணெய் பயன்படுத்தப்பட்டது என்று தெலுங்கு தேசம் கட்சியை ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. 

இந்த அறிக்கை ஒரு பொய்யான அறிக்கை என்றும், பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த, திருமலை பிரசாதம் வழங்கும் விஷயத்தில் நாயுடு தன் குடும்பத்துடன் வந்து சத்தியம் செய்ய தயாரா? மனிதப் பிறவியில் பிறந்த எவரும் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசுவதில்லை, இப்படி குற்றம்சாட்டுவதில்லை… அரசியலுக்காக எந்த மட்டத்திலும் இறங்கவும் தயங்கமாட்டார் நாயுடு என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினரும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டி கடுமையாக விமர்சித்திருந்தார். 

இதுதொடர்பாக, திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் விளக்கம் கேட்டதோடு, விரைவில் விரிவான அறிக்கையை சமர்பிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. அதோடு திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் தொடர்பாக CBI விசாரணை தேவை என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தி உள்ளார். 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.  

அதாவது, ஆந்திராவை புரட்டிபோட்ட வெள்ள சர்ச்சையை திசை திருப்பவே, திருப்பதி லட்டு பிரச்னையை சந்திரபாபு நாயுடு அரசு கையில் எடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். கடவுளின் பெயரில் நாயுடு அரசியல் செய்வதாகவும், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யை வாங்க 6 மாதத்திற்கு ஒரு முறை ஆன்லைன் டெண்டர் விடப்படும் முறையை மாற்றாமல் அதனையே YRS காங்கிரஸ் பின்பற்றியதாகவும் ஜெகன் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், YRS காங்கிரஸ் ஆட்சியில் நெய் தரமற்றது என 18 முறை திருப்பி அனுப்பப்பட்டதையும் சுட்டிக் காட்டினார்.  தர்மத்திற்கு எதிரான செயல்கள் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அதிகரித்துள்ளதாகவும், YRS காங்கிரஸ் கொண்டு வந்த நலத்திட்டங்களை அவர் முடக்கிவிட்டதாகவும் ஜெகன்மோகன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதேபோல், YRS காங். மீது பொய் வழக்குப் போடுவதே சந்திரபாபு நாயுடுவின் வேலையாக உள்ளதாகவும்,  சந்திரபாபு நாயுடு முன்வைத்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுப்பதாகவும் தெரிவித்தார். 

இறுதியாக, கடவுளை கூட அரசியலுக்குள் இழுத்து வந்து கீழ்த்தரமான வேலை செய்கிறார் சந்திரபாபு நாயுடு என்றும், முதலமைச்சர் பக்தர்களின் மனநிலையை வைத்து அரசியல் செய்வது நியாயமானதல்ல எனவும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். சந்திரபாபு நாயுடு கூறுபவை அனைத்தும் மக்களை திசை திருப்பும் கட்டுக்கதை. நெய் கொண்டுவர பயன்படுத்தப்படும் ஒவ்வொரு லாரியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம் கொடுத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow