பாலாற்றில் ஆந்திர அரசு அத்துமீறல்..! தமிழகத்தின் எதிர்ப்பை மீறி புதிய தடுப்பணைக்கு ரூ.215 கோடி ஒதுக்கீடு..!
தமிழகத்தின் எதிர்ப்பை மீறி ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்ட ரூ.215 கோடி ஒதுக்கி அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சிக்பெல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திமலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகா மாநிலத்தில் 90 கிலோமீட்டருக்கும், ஆந்திர மாநிலத்தில் 45 கிலோமீட்டருக்கும், தமிழகத்தில் 222 கிலோமீட்டருக்கும் பயணித்து வயலூர் அருகே வங்கக் கடலில் கலக்கிறது. தமிழகத்தில் திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வழியாக பாயும் பாலாற்றை நம்பி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர்.
இதனிடையே, ஆந்திரா மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு குப்பம் தொகுதி கணேசபுரம் என்ற இடத்தில் தடுப்பணை கட்டுவதற்கான முயற்சியில் அத்தொகுதியின் எம்எல்ஏ-வும், அப்போதைய முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு முயன்றார். இதற்கு தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அம்முயற்சியை ஆந்திர அரசு கைவிட்டதுடன், ஏற்கனவே உள்ள 22 அணைகளின் உயரத்தை உயர்த்தியது.
இதனால் ஆந்திராவில் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும், தமிழ்நாட்டிற்கு பாலாற்றில் தண்ணீர் வராமல் வறண்டே கிடக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் பாமக சார்பில் ஒரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு மார்ச் மாதம் 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் சாந்திபுரம் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, குப்பம் தொகுதியில் பாலாற்றின் குறுக்கே அணைகட்ட ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?