கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இண்டர்போல் உதவியை நாட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் செய்கூலி, சேதாரமின்றி 40க்கு 40 வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Jun 29, 2024 - 16:04
கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்

மானியக் கோரிக்கைகள் தொடர்பான தமிழக சட்டசபை கூட்டத் தொடரின், கடைசி நாள் கூட்டம் இன்று காலை கூடியது. அப்போது காவல்துறைக்கான மானியக் கோரிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். 

காவல்துறைக்கான பல்வேறு புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, 3 ஆண்டுகளில் காவல்துறைக்கு வெளியிடப்பட்ட 190 அறிவிப்புகளில் 179-ஐ நிறைவேற்றியுள்ளோம். காவல்துறையில் பணியாற்றுபவர்களின் மன அழுத்தத்தை போக்க, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை. காவலர்கள் விடுப்புக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகம் செய்துள்ளோம்.கொளத்தூர் சரகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படும், கோவளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் அமைக்கப்படும்”என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில் செய்கூலி, சேதாரமின்றி 40க்கு 40 வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை ஆய்வு செய்தால் 221 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக வென்றுள்ளது. 2026ல் வெற்றி பெறுவோம் என மமதையில் கூறவில்லை. மனசாட்சிப்படி கூறுகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக பேசுகையில், “கொடநாடு வழக்கில் இதுவரை 268 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொடநாடு வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்புள்ளதா என விசாரிக்க இன்டர்போல் உதவியை நாடியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேசுகையில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் 24 மணி நேரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அமைச்சர்கள், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன். அரசின் நடவடிக்கைகள் போதவில்லை என எதிர்க்கட்சிகள் கூறுவது தோல்வியை மறைக்கும் முயற்சி மற்றும் திசை திருப்பும் நாடகம். 

வழக்கு விசாரணையில் நாங்கள் எதை மறைத்தோம் சிபிஐ விசாரணையை கோருவதற்கு? நாங்கள் எதையும் மறைக்கவில்லை. முழுமையாக அரசு விசாரித்து வருகிறது. ஒருவர் கூட தப்பாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வங்கிக் கணக்குகளை முடக்கி, சொத்துகளை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சாராய விற்பனை நடந்தால் மாவட்ட காவல்துறை அதிகாரி பொறுப்பேற்க வேண்டும் என சொல்லி இருக்கிறேன்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow