பானை, தீப்பெட்டி லாம் சின்னமா? கடலுரில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலாய்

கூட்டணி கட்சிகளை இப்படி கலாய்த்தால் எப்படி என்று முகம் சுழிக்கிறார்களாம் அக்கட்சித் தொண்டர்கள்

Apr 13, 2024 - 11:01
Apr 13, 2024 - 15:10
பானை, தீப்பெட்டி லாம் சின்னமா? கடலுரில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலாய்

பெரம்பலூரில் அருண் நேருவை சித்து வேலை செய்தாவது அமைச்சர் கே.என்.நேரு ஜெயிக்க வைத்து விடுவார் என்று பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், கூட்டணியில் இருக்கும் கட்சிகளைச் சரமாரியாகக் கலாய்த்துப் பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

தேர்தல் களத்தில் திமுகவினர் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் சேர்த்து பிரசார வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஏற்கனவே பல தொகுதிகளில் அரைமனதுடன் தான் வேலை நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள், அந்தந்த தொகுதிகளுக்கு விசிட் அடித்து, திமுகவினருக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் எச்சரிக்கை விடுத்து, ஒற்றுமையாக வேலை செய்ய அறிவுறுத்தி வருகின்றனர். இப்படித் தொண்டர்கள் மத்தியிலேயே இணக்கம் இல்லாத சூழல் நிலவும் நிலையில், அமைச்சரே கூட்டணிக் கட்சிகளையும் அதன் சின்னங்களையும் கலாய்த்து மேடையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

கடலூரில் யாதவ மகா சபை சார்பில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சிதம்பரத்தில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னம்தான் கிடைத்திருக்கிறது என்றும், திருச்சியில் போட்டியிடும் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு தீப்பெட்டிதான் கொடுத்திருக்கிறார்கள் என்றும் பேசினார். இதைக் கட்சிக்குள் தாங்கள் கலாய்த்துக் கொண்டிருந்ததாகவும் கூறி சிரிப்பலையில் ஆழ்ந்தார்.

அதேபோல், காங்கிரஸுக்கு 9 தொகுதிகளைத் திமுக ஒதுக்கியிருக்கிறது என்று சொன்ன ராஜகண்ணப்பன், 7 தொகுதிகள்தான் தர வேண்டும் என்று அமைச்சர்கள் சொன்னதாகவும், பின்னர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதால் 9 தொகுதிகள் கொடுக்கப்பட்டதாகவும் கூறினார். அப்போது ராகுல் காந்தி என்று சொல்வதற்குப் பதில் ராஜீவ் காந்தி என்றும் உளறினார்.

தொடர்ந்து பேசியபோது, பெரம்பலுரில் அருண் நேரு எப்படியும் ஜெயித்துவிடுவார் என்று சொன்ன அவர், அதற்கான சித்து வேலையெல்லாம் அமைச்சர் கே.என்.நேருவுக்குத் தெரியும் என்றும் எப்படியும் ஜெயிக்க வைத்து விடுவார் என்றும் பேசினார். திமுகவினர் தங்கள் பலத்தின்மீது ஓவர் கான்பிடன்ஸுடன் இருக்கலாம். ஆனால், கூட்டணி கட்சிகளை இப்படி கலாய்த்தால் எப்படி என்று முகம் சுழிக்கிறார்களாம் அக்கட்சித் தொண்டர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow