நான் வாழ்நாளில் மறக்க கூடாத ரெண்டு பேர்... - போஸ் வெங்கட் உருக்கம்

சார் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள,  பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

Sep 19, 2024 - 12:06
Sep 19, 2024 - 13:08
நான் வாழ்நாளில் மறக்க கூடாத ரெண்டு பேர்... - போஸ் வெங்கட் உருக்கம்

SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "சார்". சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள,  பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

நடிகர் சரவணன் பேசும்போது, “போஸ் வெங்கட் கதை சொல்லும் போது, நடித்துக்கொண்டே கதை சொன்னார், இவ்வளவு அருமையாக நடிக்கிறாய், இப்படி நான் நடிக்க முடியுமா? எனக் கேட்டேன், ஆனால் தைரியம் தந்து நடிக்க வைத்தார். நாட்டுக்கு தேவையான ஒரு அருமையான படிப்பினையை, நல்ல கதையை, போஸ் வெங்கட் படமாக்கியுள்ளார். இப்படத்தை தயாரித்த சிராஜுக்கு நன்றி. நான் இந்தப்படத்தில், நடித்தது எல்லாமே போஸ் சொல்லித்தந்தது தான், படம் மிக நன்றாக வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.

நடிகர் விமல் பேசும்போது, “போஸ் மாமா கதை சொல்ல வந்தார், எனக்கு ரொம்ப பிடித்தது. வாகை சூடவா படத்திற்கு பிறகு எனக்கு  நல்ல படம் தந்துள்ளார். அவரே நடித்து காட்டி, தான் நடிக்க வைப்பார், அருமையாக படத்தை எடுத்துள்ளார். இன்று வாழ்த்த வந்துள்ள வெற்றிமாறன் சார், அவர் இந்த படத்திற்குள் வந்த பிறகு தான், இப்படம் முழுமையான சார் ஆகியிருக்கிறது நன்றி. என்னை எப்போதும் ஊக்கம் தந்து, தூக்கிவிடும் நண்பர் விஜய் சேதுபதி,  நான் சோர்வாக இருக்கும் போதெல்லாம், என்னை போன் செய்து, உற்சாகப்படுத்துவார், அவரால் தான் நான் இப்போது கொஞ்சம் நன்றாக பேச ஆரம்பித்துள்ளேன் நன்றி. நட்டி அண்ணன் இந்த விழாவிற்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி. இப்படத்தில் சரவணன் சார் அற்புதமாக நடித்துள்ளார். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர், படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, ”இன்று தான் விமல் மிக நன்றாக பேசியிருக்கிறார். கூத்துப்பட்டறை காலத்திலிருந்தே, நான் விமலின் ரசிகன், அப்போது அவர் நடிப்பதை ரசித்துப்பார்ப்பேன். இந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும், போஸ் வெங்கட்டை டீவி சீரியல் நடிக்கும் காலத்திலிருந்து தெரியும். அவர் அப்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டே நடித்துக்கொண்டிருந்தார், அதிலேயே தங்கி விடாமல், சினிமாவுக்கு வந்து, இப்போது இயக்கம் என தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக்கொண்டே செல்கிறார். விடுதலை பட ஷூட்டிங் சமயத்தில், அரசியல் புத்தகங்கள் படித்துக்கொண்டிருப்பார். அவருடன் அரசியல் பேசும்போது அவ்வளவு தெளிவாக எடுத்துச் சொல்வார். அவரது அரசியல் பிரவேசத்திற்காக காத்திருக்கிறேன். இந்தப்படத்தை மிக அருமையாக எடுத்திருக்கிறார். இந்த காலத்திற்கு தேவையான விசயத்தைப் பேசியிருக்கிறார். சரவணன் மிக அருமையாக நடித்துள்ளார். படத்தை முழுதாக பார்த்து விட்டேன், கடைசி 40 நிமிடம் படம் உங்களை உலுக்கி விடும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

நட்டி நட்ராஜ் பேசும்போது, ”இந்த திரைக்கதை என்னிடம் வந்தது, போஸ் வெங்கட் சாரை, பல காலமாகத் தெரியும், அவர் கடுமையான உழைப்பாளி,  என் வாழ்க்கையில் சார் மிகப்பெரிய ஊக்கமாக இருந்தார்.  இந்தப்படம் பார்த்த போது, எனக்கு அது ஞாபகம் வந்தது. வெற்றிமாறன் சார், அவரிடம் எந்த நல்ல படைப்பு வந்தாலும், அதைச் சரியான இடத்திற்கு கொண்டு சேர்த்து விடுகிறார் அவருக்கு நன்றி. மகாராஜா படத்தில் எனக்கு சரியான இடம் தந்த விஜய் சேதுபதிக்கு நன்றி. இப்படத்தில் விமல் சார் அருமையாக நடித்துள்ளார். சரவணன் சார் நன்றாக நடித்துள்ளார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி” என்றார்.

இயக்குநர் போஸ் வெங்கட் பேசும்போது, “இதே இடத்தில் கன்னிமாடத்தோடு நின்றேன். இன்று சார் வரை இங்கு வரை கூட்டி வந்தது நீங்கள் தான். சார் படம் உங்களை மகிழ்விக்கும். விஜய் சேதுபதி சாரை கன்னிமாடம் படத்திற்காக அழைக்கப் போனேன், அவர் வேறொரு இயக்குநரோடு பிஸியாக இருந்தார், ஆனால் என்னைப்பார்த்ததும், ஓடோடி வந்தார், என்ன எனக்கேட்டார், விழாவுக்கு வரக் கேட்டேன், அவர் வர்றேன் போய் வாருங்கள் என்றார். இப்போதும் அப்படிதான், நேற்று தான் அழைத்தேன், உடனே வர்றேன் என்றார். இப்படி ஒரு மனிதனா என ஆச்சரியப்படுத்துகிறார், அவருக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது, வேறொரு வார்த்தை தான் கண்டுபிடிக்க வேண்டும் நன்றி. நட்டி அப்பா மருத்துவமனையில் இருக்கிறார், ஆனால்  அவர் நான் கூப்பிட்டவுடன் வருகிறேன் என்றார் நன்றி. இப்படத்திற்கு முதலில் மா பொ சி என பெயர் வைத்தேன், பிரச்சனை வந்ததால், சார் தலைப்பை வாங்கி தந்தது, அம்மா சிவா சார் தான். நன்றி. இப்படத்தை நல்ல படம் என எல்லோரிடமும் சேர்த்த தனஞ்செயன் சாருக்கு நன்றி. சித்தார்த் தான் முதலில் இசையமைப்பதாக இருந்தது, ஆனால் சில காரணங்களால் முடியவில்லை ஆனால் எல்லா விழாவிற்கும் முன்னால் வந்து நிற்கிறார் நன்றி”

“எனக்கு அருமையான பாடல் தந்த விவேகா சாருக்கு நன்றி. விமல் நான் கதை சொன்னவுடன், பண்ணுவோம் மாமா என்றார். எனக்காக அவ்வளவு கடினமாக உழைத்தார். இப்படி ஒரு கதாநாயகன் கிடைப்பது கடினம், விமலுக்கு நன்றி. எனக்காக வந்து நடித்து தந்த சரவணன், நடிகை சாயா எல்லோருக்கும் நன்றி. ஆத்தங்குடி இளையராஜா எனக்காக வந்து ஒரு பாடல் செய்து தந்தார். என் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி. என் முதல் பட கதாநாயகன் ஶ்ரீராம் இப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளான். அருமையான இசையைத் தந்துள்ள சித்து குமாருக்கு நன்றி. இப்படம் முடித்து  ரிலீஸ் செய்யத் தயங்கிய போது, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பார்த்து விட்டு, நான் தான் ரிலீஸ் செய்வேன் என்றார், கோட் படத்திற்கு பிறகு இப்படத்தை ரிலீஸ் செய்கிறார். வெற்றிமாறன் சார் படத்தை பார்க்க வேண்டும் என ஆசை, படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், உங்கள் பேர் வேண்டும் என்றேன், படம் பார்த்து விட்டு, நல்லாருக்கு நல்ல படம் எடுத்திருக்கிறாய் என்றார், அப்போது தான் உயிர் வந்தது. அவர் படத்தை அணுஅணுவாக அலசி, சில கரக்சன் சொன்னார் அதையெல்லாம் மாற்றி எடுத்தேன். என் பெயரைப் போட்டுக்கொள் என்றார், நான் வாழ்நாளில் மறக்க கூடாத ரெண்டு பேர் வெற்றிமாறன் சார், விஜய் சேதுபதி சார் இருவருக்கும் நன்றி” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow