தஞ்சை பெரியகோவில் வளாகம் அருகே அசைவ உணவகம் நடத்த அனுமதியா?

வரலாற்று சிறப்பு மிக்க இடத்தில் தனியார் பயன்பெறும் வகையில் அசைவ உணவு நடத்துவதற்கு அனுமதி கொடுத்திருப்பதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். 

Dec 27, 2023 - 13:56
Dec 27, 2023 - 17:37
தஞ்சை பெரியகோவில் வளாகம் அருகே அசைவ உணவகம் நடத்த அனுமதியா?

தஞ்சாவூர் பெரியகோவில் சுற்றுசுவரை ஒட்டியுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கலையரங்கத்தை அசைவ உணவகம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு அனுமதி அளிக்கபட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

தஞ்சாவூர் பெரியகோவில் வலது புற சுவரை ஒட்டியிருக்கும் பெத்தண்ணன் கலையரங்கம் தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்று. பழமையான இந்த கலையரங்கம் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமானது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்ட கலையரங்கத்தை உணவகம் நடத்துவதற்கும், சுப நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவதற்கும் ஒப்பந்த அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் தனியாரிடம் வாடகைக்கு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மாநகராட்சியின் இந்த செயலுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இது குறித்து அ.ம.மு.கவின் தஞ்சாவூர் மாநகர செயலாளர் ராஜேஸ்வரனிடம் பேசினோம், பெத்தண்ணைன் என்பவர் தி.மு.க நகர்மன்றத் தலைவராக இருந்தபோது கட்டப்பட்ட கலையரங்கத்திற்கு அவரது பெயரான பெத்தண்ணன் என்றே வைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெத்தண்ணன் அரங்கத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

எம்.ஜி.ஆர் நடித்த படம் ஒன்றின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்டனர். எம்.ஆர்.ராதா, ஆர்.எஸ்.மனோகர் ஆகியோரின் நாடகங்கள் உட்பட வரலாற்றில் பேசப்படக்கூடிய கூடிய பல நிகழ்வுகள் இங்கு நடைபெற்றுள்ளன. பழமையான பெத்தண்ணன் அரங்கம் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது. 

பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் புல்வெளி மற்றும் உட்கார்வதற்கு நாற்காலிகளுடன் அழகாக புனரமைக்கப்பட்டுள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தை ரூ.83,000 மாத வாடகைக்கு கேட்டரிங் நடத்தும் உரிமையாளர்  ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளனர்.இவர் மேயர் சண்.இராமநாதனுக்கு நெருக்கமானவர் என்பதால் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றாமல், முறையாக அறிவித்து டெண்டர் நடத்தாமல் விதியை மீறி கடையை ராஜாவிற்கு ஒதுக்கியுள்ளனர்.

நிகழ்ச்சி நடத்துவதற்கான மேடையுடன் கூடிய பெத்தண்ணன் அரங்க வளாகத்தில் அசைவ உணவுக்கான பாஸ்ட் புட் உணவகம் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.அதே போல் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட உள்ளனர். அந்த சமயத்தில் ஆர்டரின் பேரில் உணவு சமைத்து கொடுக்கவும் உள்ளனர். பெரியகோவில் சுற்று சுவரை ஒட்டியிருப்பதால் இங்கு அசைவ உணவு சமைப்பதற்கு எப்படி அனுமதித்தனர் என தெரியவில்லை. ஆன்மீகவாதிகளை அவமதிக்கு செயலாக இது இருக்கிறது.

பெத்தண்ணன் கலையரங்கத்தை ஒட்டியுள்ள் சிவகங்கை பூங்கா சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளை குறித்து வைத்து உணவகம் அமைக்கின்றனர். பெரியகோவிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜசோழனுக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்டுகிறது. அரசின் இந்த செயல் வரவேற்றக்கதக்கது என்றாலும், மேம்பாலம் அருகில் மணி மண்டபம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்துள்ளனர்.

ராஜராஜசோழன் சிலைதான் கோவிலுக்கு வெளியே உள்ளது. அவருக்காக அமைக்கப்படும் மணிமண்டபமாவது அவரால் கட்டப்பட்ட கோவிலை ஒட்டியுள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் அமைத்தால் சிறப்பாக இருக்கும். பெரியகோவிலுக்கு வரும் வெளிநாட்டினர் உள்ளிட்ட பலரும் ராஜராஜ சோழன் மணி மண்டபத்தை பார்த்து பயன் பெறுவார்கள். ஒரு ஏக்கருக்கு மேலான இடம் கொண்ட பெத்தண்ணன் வளாகத்தில் சிறப்பாக மணி மண்டபத்தை அமைக்கலாம்.

வரலாற்று சிறப்பு மிக்க இடத்தில் தனியார் பயன்பெறும் வகையில் அசைவ உணவு நடத்துவதற்கு அனுமதி கொடுத்திருப்பதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். 

தொடர்ச்சியாக மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கட்டங்களை தனியாரிடம் தாரை வார்த்து வருகிறது. மேயர் சண்.இராமநாதனுக்கு நெருக்கமானவர்களே இதில் பயனடைகின்றனர். இதனை திரும்ப பெறவில்லை என்றால் தஞ்சாவூர் மாநகராட்சியை கண்டித்து அ.ம.மு.க சார்பில் விரைவில் போராட்டம் நடத்துவதற்கும் ஆயத்தமாகி வருகிறோம் என்றார்.

இது குறித்து தி.மு.க மேயர் சண்.இராமநாதனிடம் பேசினோம், ’பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு நடத்துவதற்கு வாடகைக்கு விடும் வகையில் தனியாரிடம் மாத வாடகை அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளோம். நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஆர்டர் செய்தால் சைவ உணவு சமைத்து எடுத்து வந்து தருவதற்கு அனுமதி கொடுத்துள்ளோம்.அசைவ உணவு பரிமாறுவதற்கு அனுமதியில்லை.வாடகைக்கு விட்டதன் மூலம் வரும் வருமானத்தில் மாநகராட்சி வளர்ச்சியடையும், வரலாற்று சிறப்புமிக்க அரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடப்பதன் மூலம் கலைகள் வளரும்’ என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow