இஸ்ரேல்- ஈரான் போர், மாறி மாறி தாக்குதல் பதற்றம் : வளைகுடா நாடுகள் கடும் பாதிப்பு

இஸ்ரேல், ஈரான் இடையே போர் ஏற்பட்டுள்ளதால், வளைகுடா நாடுகள் பெரும் பாதிப்பை சந்திக்க தொடங்கியுள்ளன.

இஸ்ரேல்- ஈரான் போர், மாறி மாறி தாக்குதல் பதற்றம்  : வளைகுடா நாடுகள் கடும் பாதிப்பு
வளைகுடா நாடுகள் கடும் பாதிப்பு

யுஏஇ-ல், சுற்றுலா தலங்கள், பங்கு சந்தைகள்  மூடல்

ஈரான் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு பங்குச்சந்தைகள் இரு தினங்களுக்கு மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா, ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகம்,குவைத், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது தாக்குதலில் இறங்கி இருக்கிறது.

போர் எதிரொலியாக பிராந்தியம் முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. இதனால், துபாயில் உள்ள உலகளாவிய பன்முக கலாசார பொழுதுபோக்கு மையத்தை தற்காலிகமாக மூடுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதேபோல, அனைத்து சுற்றுலா தலங்கள், உணவகங்கள், ரிசார்ட்டுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு முக்கிய பங்குச் சந்தைகளான அபுதாபி செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் மற்றும் துபாய் நிதிச் சந்தை ஆகியவற்றின் வர்த்தகம், இன்றும், நாளையும் நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

விமான சேவை ரத்து : 20 ஆயிரம் கோடி இழப்பு

உலகிலேயே அதிகளவில் சர்வதேச பயணியரை துபாய் விமான நிலையம் கையாள்கிறது. ஆண்டுக்கு 10 கோடி பயணியரை கையாள்கிறது. துபாய் விமான நிலையத்தில் இருந்து உலகில் உள்ள, 260 நகரங்கள், 100 நாடுகளுக்கு விமான போக்குவரத்து நடக்கிறது. ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளுக்கு செல்வதற்கு, துபாய் மையப் பகுதியாக இருக்கிறது. இதனால், நெடுந்துார விமானங்களுக்கு இளைப்பாறும் இடமாக திகழ்கிறது

துபாயில் உள்ள சர்வதேச விமான நிலையம் நாளொன்றுக்கு, 2,60,000 பயணியரை கையாள்கிறது. இந்த அளவுக்கு அதிகளவில் பயணியரை கையாள்வதால், விமான நிலையம் சார்ந்த வருவாய் மற்றும் சுற்றுலா மூலம் வரும் வருவாய் துபாய்க்கு அதிகரித்து வந்தது. போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால்  நாளொன்றுக்கு, 2,000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

விசா நீட்டிப்பு – இந்திய வெளியுறவு அமைச்சகம்

ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க மோதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இதனால் பல விமான நிறுவனங்கள் தங்களது விமான சேவையை ரத்து செய்து வருகின்றன. இதனால் இந்தியா வந்த வெளிநாட்டு பயணிகள் மீண்டும் தங்களது நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் நிலவுகிறது.

இந்திய வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘மேற்காசிய பிராந்திய நிலவரத்தால் பயணத் திட்டத்தை மாற்றியுள்ள இந்தியாவுக்கு வந்துள்ள வெளிநாட்டு பயணிகள், விசா காலத்தை நீட்டிக்க அல்லது இந்தியாவில் தங்குவதற்கு அனுமதி பெற விரும்பினால், அருகிலுள்ள வெளிநாட்டு பயணிகள் பிராந்திய பதிவு அலுவலகத்தை அணுகலாம். அவா்களுக்குத் தேவையான உதவிகள் அங்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow