தூளாக நடக்கும் IPL Ticket Scam.. அடப்பாவிங்களா..! உஷார் மக்களே

பிரபல டிக்கெட் புக்கிங் இணையதளங்களை போல், போலியாக இணையதளங்களை உருவாக்கி ஐ.பி.எல் டிக்கெட்டுகளை விற்று சைபர் க்ரைம் கும்பல் ஏமாற்றி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சேப்பாக்கம் ஸ்டேயத்தில் வீரர்களுக்கு அருகே போட்டிகளை காணலாம் என அந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. 

Apr 7, 2024 - 13:42
தூளாக நடக்கும் IPL Ticket Scam.. அடப்பாவிங்களா..! உஷார் மக்களே

ஆன்லைன் மோசடிகள் இப்போதெல்லாம் மிகவும் பொதுவானதாகி விட்டன. இணையத்தில் எந்தவொரு பரிவர்த்தனைக்கும் முன், ஒருவர் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையென்றால், அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும். தற்போது கிரிக்கெட் ரசிகர்களை குறிவைத்து சைபர் க்ரைம் கும்பல் நூதன மோசடியில் ஈடுபட்டு பல கோடிகளை ஈட்டி வருகிறது. ஐ.பி.எல் தொடர் சூடுபிடிக்க தொடங்கியிருக்கும் நிலையில், மோசடியாளர்கள் பிரபல புக்கிங் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களை போலவே, போலியான இணைய தளத்தை உருவாக்கி உள்ளனர். 

போட்டிக்கான டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்யலாம் எனக் கூறி இயர்லி பேர்ட் (early bird) என்ற சலுகை மூலமும், சிறப்பு தள்ளுபடி என்ற பெயரிலும் ஐபிஎல் ரசிகர்களை குறிவைத்து இந்த மோசடி நடைபெறுவதை சைபர் க்ரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் ஐபிஎல் ரசிகர்கள் அதிகமாக இருக்கிற காரணத்தினால், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தோனி உள்பட விளையாட்டு வீரர்களை அருகில் பார்க்கும் வகையில் டிக்கெட் உள்ளதாக கூறி பலரிடமும் நடைபெற்றுள்ளது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இடிக்கப்பட்ட ஸ்டாண்டுகளிலும், விஐபி டிக்கெட்டுகள் இருப்பதாகவும் கூறி இந்த மோசடியை சைபர் க்ரைம் கும்பல் அரங்கேற்றி வருகிறது.

தொடரின் முதல் போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளை அதிகளவு மோசடி செய்யப்பட்டதும் தெரியவந்திருக்கிறது. போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது, ஆன்லைனில் புக் செய்து பலருக்கும் அனுமதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஏமாந்தவர்கள், போலி இணையதளங்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்கி மோசடிக்கு ஆளாகியிருப்பதாக சைபர் க்ரைம் போலீசார் கூறியிருக்கின்றனர்.

இந்த மோசடி கும்பல் யார்? எங்கிருந்து செயல்படுகிறார்கள்? எவ்வளவு மோசடி செய்திருக்கிறார்கள்? என்பதை அறியும் வகையில் சென்னை மற்றும் ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம், ஆசை தூண்டும் இதுபோன்ற விளம்பரங்களை நம்பாமல், ஆன்லைன் இணையதளங்கள் சரிபார்த்து டிக்கெட்டுகளை வாங்குமாறு சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow