I.N.D.I.A கூட்டணில எல்லாரும் ஊழல்வாதிங்கதான்.. ஒண்ணு Bail ல இருக்காங்க.. இல்ல, Jail ல இருக்காங்க.. ஜெ.பி.நட்டா விமர்சனம்..
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தமிழ்நாடு வந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள்தான் என்றும், காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை வாரிசு அரசியல் மட்டுமே நடைபெறுகிறது என்றும் விமர்சனம் செய்தார்.
அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வாக்குகள் சேகரித்தார். அப்போது பேசிய அவர்,
“தமிழ்நாட்டில் தமிழ் பண்பாடு, கலாசாரம், அதன் தொன்மை ஆகியவற்றுக்கு பாஜக மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆனால் திமுக, தமிழ்நாட்டின் கலாசாரத்தை அழித்து வருகிறது.
இந்தியாவில் 10 கோடி பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் 40 லட்சம் தமிழ்நாட்டிற்கும், இரண்டரை லட்சம் சிதம்பரம் நாடாளுமன்ற பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதில் இந்தியா முழுவதும் 11.40 கோடி இணைப்புகளும், தமிழ்நாட்டில் 80 லட்சம் இணைப்புகளும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு 4 லட்சம் குடிநீர் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சென்னையும் பெங்களூரும் தொழிற்சாலை காரிடர் நகரங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி வழங்கி வருகிறார். அதே வேளையில் இந்தியாவில் I.N.D.I.A கூட்டணி என்று ஒன்று உருவாகியுள்ளது. இந்த கூட்டணியின் மொத்த கொள்கையே ஊழல் மட்டும்தான்.
பிரதமர் மோடி ஊழலை ஒழிப்பேன் என்று சபதமிட்டு பணியாற்றி வருகிறார். தமிழ்நாட்டில் திமுக என்றால் வாரிசு அரசியல், மணி லாண்டரி, கட்டப்பஞ்சாயத்து என்பது அர்த்தமாகும். I.N.D.I.A கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுமே வாரிசு அரசியலையே முன்னிறுத்தி உள்ளது. இது அந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும்.
I.N.D.I.A கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளன. பரத் அப்துல்லா காமன்வெல்த் கிரிக்கெட் ஊழல், லாலு பிரசாத் மாட்டுத்தீவன ஊழல், அகிலேஷ் யாதவ் லேப்டாப் ஊழல், கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல், திமுக கருணாநிதி குடும்பம் வருமான வரி ஊழல் உள்ளிட்ட ஊழலில் சிக்கித் தவிக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் சோனியா, ராகுல், சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட அனைவருமே தற்பொழுது பெயில் வாங்கி வெளியில் உள்ளனர். இந்தியா கூட்டணி என்பது ஒன்று ஜெயில் அல்லது பெயில் என்று சொல்லும் படி ஊழல் கட்சிகள் நிறைந்த கூட்டணியாக உள்ளது என்றும் விமர்சித்தார்.
What's Your Reaction?