பணியிடங்களில் பாலியல் தொந்தரவு! உள்ளூர் குழுக்கள் மூலம் புகார் அளிக்கலாம்..

பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டப்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூர் புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

Feb 17, 2024 - 19:48
பணியிடங்களில் பாலியல் தொந்தரவு! உள்ளூர் குழுக்கள் மூலம் புகார் அளிக்கலாம்..
பணியிடங்களில் பாலியல் தொந்தரவு! உள்ளூர் குழுக்கள் மூலம் புகார் அளிக்கலாம்..

அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 2013ஆம் ஆண்டு பெண்களை பாதுகாக்கும் சட்டம் தமிழக அரசால்  கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், பஞ்சாலைகள், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஸ்பின்னிங் மில்களில் பணியாற்றும்  பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி வருவதாகவும், இதனை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும்  புகார் குழு அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையிலும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடக் கோரி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டப்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூர் புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருவதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அதிகாரி கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த குழுக்கள், புகார்களை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டது. மேலும், 10 தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களில் உள் விசாரணைக்குழு எனப்படும் விசாகா குழு அமைக்கவும் அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow