மெத்தபட்டமைன் கடத்தல் பைக்குகளுக்கு தீ வைப்பு.. மதுரையில் சிக்கிய இளைஞர்.. காரணம் என்ன தெரியுமா?

May 15, 2024 - 14:37
மெத்தபட்டமைன் கடத்தல் பைக்குகளுக்கு தீ வைப்பு.. மதுரையில் சிக்கிய இளைஞர்.. காரணம் என்ன தெரியுமா?

மதுரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு அலுவலகத்தில், மெத்தபட்டமைன் கடத்தல் வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் எரிக்கப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட விஸ்வநாதபுரம் முதலாவது தெருவில், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான வழக்குகள் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கே.கே.நகர் பகுதியில் 5 கோடி மதிப்பீட்டில் மெத்தபெட்டமைன் பதுக்கி வைத்திருந்த தமிமுன் அன்சாரி என்பவரை கைது செய்த அதிகாரிகள், அவர் வைத்திருந்த பைக்குகளை பறிமுதல் செய்து, அந்த அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருந்துள்ளனர். 

இதனிடையே, கடந்த மே 12ஆம் தேதி நள்ளிரவில், மர்ம நபர் ஒருவர் அந்த பைக்குகளுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில்,  மதுரை ஆனையூர் டோபாஸ் காலனி பிரசன்னா நகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (எ) மேத்தா என்பவர் தான் பைக்குகளுக்கு தீவைத்தார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட அருண்குமார் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பைக்குகளை தீ வைத்ததற்கான காரணம் என்ன? பின்புலத்தில் வேறு யாரேனும் இருக்கிறார்களா? ஆகியவை குறித்து துருவி துருவி விசாரணை நடத்தினர். 

அதில், மதுபோதையில் வாகனங்களுக்கு தீவைத்ததாகவும், அந்த வாகனங்களில் இருந்த பெட்ரோலை பிடித்து மீண்டும் வாகனங்களின் மீது ஊற்றி தீவைத்ததாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow