போதைக்கு எதிரான போர்... மதுபான கடைகளை குறைக்க வேண்டும்... வாய்ஸ் கொடுத்த கமல், விஷால்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து நடிகர்கள் கமல்ஹாசன், விஷால் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் நிலையில், இதுவரை 10 பேருக்கு கண் பார்வை பறிபோனதாக சொல்லப்படுகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசுக்கு அதிமுக, பாஜக உட்பட பல கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, நிர்வாக திறன் குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளன. அதேபோல், நடிகரும் தவெக தலைவருமான விஜய் தமிழக அரசு மீது நேரிடையாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் கருத்துத் தெரிவிக்கவில்லை என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரும் இதுபற்றி விமர்சித்திருந்தார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் விவகாரம் குறித்து கமல்ஹாசன் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்வீட் செய்துள்ள அவர், “கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடையை விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது” என தெரிவித்துள்ளார். கமலின் இந்த ட்விட்டர் பதிவை சிலர் விமர்சித்தும் வருகின்றனர். அதாவது கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் கடுமையாக கண்டனம் தெரிவிக்காமல், பொத்தாம் பொதுவாக கருத்துத் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும், கமலுக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என்பதால் திமுக அரசை விமர்சிக்கவில்லை எனவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
கமல்ஹாசனைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் விவகாரம் தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அதில், ”கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் விஷச் சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும், போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
மேலும், "கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்."
என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு விஷச் சாரயத்தை ஒழிக்கவும்... சமீப நாட்களாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும்... தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை... இந்த அறிக்கை வாயிலாக தமிழக மக்களின் ஒருவனாக தமிழ்நாடு அரசிற்கு சமர்பிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?