முதுகில் குத்திய இபிஎஸ்... சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி விமர்சனம்...
மக்களுக்கான திட்டங்கள் தொடர உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் - செல்வகணபதி
                                முதுகில் குத்தி ஆட்சியைப் பிடித்தவர் எடப்பாடி பழனிசாமி என திமுக வேட்பாளர் செல்வ கணபதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி போட்டியிடுகிறார். இந்த நிலையில் சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியில் டி.எம்.செல்வ கணபதி தனது பரப்புரையை தொடங்கினார். கோரிமேடு, சின்ன கொல்லப்பட்டி, பெரிய கொல்லப்பட்டி, சின்ன திருப்பதி, ஜான்சன் பேட்டை மெயின் ரோடு, பூ மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் பரப்புரை மேற்கொண்டார்
அப்போது பேசிய செல்வகணபதி, "வன்னியர்களுக்கு கிடைக்க வேண்டிய 10.5% இட ஒதுக்கீட்டிற்கு திட்டமிட்டு தவறான அரசாணையை வெளியிட்டதால்தான் அதனை முறையாக அமல்படுத்த முடியவில்லை. எடப்பாடி பழனிசாமியை அதிமுகவிற்கு அறிமுகப்படுத்தியது நான். முத்துசாமி, அர்ஜுனன், செங்கோட்டையன் உள்ளிட்ட அனைவரின் முதுகிலும் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி. தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவையும் அவர் விட்டு வைக்கவில்லை. துரோகத்தைப் பற்றி பேச அவருக்கு தகுதி இல்லை" என விமர்சித்தார்.
"தமிழ்நாட்டு மக்களின் தேவையை அறிந்து முதலமைச்சர் ஸ்டாலின் பல நல்ல திட்டங்களை செய்து வருகிறார். எனவே மக்களுக்கான திட்டங்கள் தொடர உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்" எனக் கூறி செல்வகணபதி வாக்கு சேகரித்தார்.
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            