புற்றுநோய்க்கு மனைவி உயிரிழப்பு... அடுத்த நொடியே துப்பாக்கியால் சுட்டு உள்துறை செயலாளர் தற்கொலை!
சிலாடித்யா செட்டியாவின் தாயும், மாமியாரும் நீண்ட நாட்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், கணவன்-மனைவி இருவரும் தனியாகவே வசித்து வந்துள்ளனர். சிலாடித்யா செட்டியாவின் மனைவி சில மாதங்கள் சென்னையிலும் தங்கி இருந்து சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது
கவுகாத்தி: அசாம் மாநில உள்துறை செயலாளர் சிலாடித்யா செட்டியா, மனைவி இறந்த துக்கம் தாங்காமல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அசாம் மாநிலத்தில் உள்துறை செயலாளராக இருந்து வந்தவர் சிலாடித்யா செட்டியா (44). இவரது மனைவி அகமோனி பார்பருவா (40). கடந்த 2013ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் ஏதும் இல்லை.
அகமோனி பார்பருவா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் கடந்த 2 மாதங்களால கவுகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிலாடித்யா செட்டியா நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்து மனைவியை அருகில் இருந்து கவனித்துக் கொண்டார். இந்த நிலையில், அகமோனி பார்பருவா நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மருத்துவமனை மருத்துவர்கள் சிலாடித்யா செட்டியாவிடம் தெரிவித்தபோது அவர் உடைந்து போனார். உடனே அவர் மருத்துவர்களிடம், 'ஐசியுவில் மனைவி உடல் அருகில் நின்று பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று கேட்டார்.
அதன்பேரில் ஐசியுவில் இருந்து மருத்துவர்கள், நர்சுகள் வெளியே வந்தனர். பின்பு சிறிது நேரத்தில் ஐசியுவில் இருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டது. மருத்துவமனை ஊழியர்கள் பதறியடித்தபடி உள்ளே சென்று பார்த்தபோது, சிலாடித்யா செட்டியா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஹிதேஷ் பாரு கூறுகையில், ''துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் நாங்கள் ஐசியுவுக்கு சென்றோம். அவரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை'' என்றார்.
2009ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் பிரிவை சேர்ந்த சிலாடித்யா செட்டியா, ரவுடிகளை ஒடுக்கி குற்றங்களை கட்டுப்படுத்தியதற்காக 2015ம் ஆண்டு குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் சிறந்த காவல் அதிகாரிகளுக்கான விருதை வென்றார்.
சிலாடித்யா செட்டியாவின் தாயும், மாமியாரும் நீண்ட நாட்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், கணவன்-மனைவி இருவரும் தனியாகவே வசித்து வந்துள்ளனர். சிலாடித்யா செட்டியாவின் மனைவி சில மாதங்கள் சென்னையிலும் தங்கி இருந்து சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?