சித்தாள் சரண்யா மீது கொத்தனாருக்கு ஆசை.. சுத்தியால் அடித்துக்கொலை.. அலறிய சென்னை

ஆசைக்கு இணங்க மறுத்த பெண் தொழிலாளியை சுத்தியலால் அடித்து கொலை செய்த கொத்தனாரை சென்னையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Apr 2, 2024 - 14:31
சித்தாள் சரண்யா மீது கொத்தனாருக்கு ஆசை.. சுத்தியால் அடித்துக்கொலை.. அலறிய சென்னை

சென்னை கேகே நகர் பக்தவச்சலம் காலனி 6-வது தெருவில் வசித்து வரும் கௌசல்யா. தனது வீட்டை சீரமைப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சந்துரு என்பவரை அணுகியுள்ளார்.  மேஸ்திரி சந்துரு, கௌசல்யா வீட்டிற்கு சென்று ஆய்வு செய்து விட்டு தனது கீழ் பணிபுரியும் தொழிலாளர்களை வைத்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டார்.

கட்டிட பராமரிப்பு பணிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.  கடந்த மாதம் 29 ஆம் தேதி மாலையில் மேஸ்திரி சந்துரு கௌசல்யாவின் வீட்டினை பார்வையிடுவதற்காக சென்றார். அப்போது அங்கு எம்ஜிஆர் நகர் சூலைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சித்தாள் பணியில் ஈடுபட்டிருந்த சரண்யா, பின்னந்ததலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். 

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மேஸ்திரி சந்துரு உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கேகே நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.  இதனையடுத்து சித்தாள் சரண்யா மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து சந்துரு எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கு இடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரண்யா நேற்று (ஏப்ரல் 1) நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து எம்ஜிஆர் நகர் காவல்துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், கொலையான சரண்யாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது தெரியவந்தது. கட்டிட சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவெற்றியூரை சேர்ந்த கொத்தனார் மணிகண்டன், என்பவர் சரண்யாவை சுத்தியால் அடித்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து போலீசார் மணிகண்டனை கைது செய்து  விசாரணை நடத்தியபோது அவர் அளித்த வாக்குமூலத்தில் கொலைக்கான காரணம் தெரியவந்தது. கொத்தனார் மணிகண்டன், சித்தாள் வேலை பார்த்து வந்த சரண்யாவை தனது பாலியல் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு சரண்யா எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், தன் கையில் வைத்திருந்த சுத்தியலால் சரண்யாவின் பின்னந்தலையில் ஓங்கி அடித்து விட்டு தப்பி சென்று விட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சரண்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். கொத்தனாரின் பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த சரண்யா உயிரிழந்ததோடு அவரது இரண்டு குழந்தைகளும் அநாதைகளாகி விட்டனர்.  கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow