தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய வைத்த கொசுத்தேனி:!

கடைசியில் தலைமையாசிரியர் வீட்டில் உட்கார வேண்டிய நிலைமையாகியுள்ளது

Dec 7, 2023 - 13:57
Dec 7, 2023 - 15:19
தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய வைத்த கொசுத்தேனி:!

எந்தளவுக்கு பாராட்டப்படும் சமுதாயமாக இருக்கிறதோ அதில் பாதியளவுக்காவது விமர்சனங்களை வாங்கிக் கட்டும் சமுதாயமாகவும் இருக்கிறது ஆசிரியர் சமுதாயம். பள்ளிகளின் ஆசிரியர்கள், ஆசிரியைகள் (மிக அரிதாக), தலைமையாசிரியர்கள் போன்றோர் போக்சோ சர்ச்சைகளில் சிக்குவது சமீப காலமாக தொடர் கதையாகுவதை வேதனையுடன் பார்க்கிறோம். 

அதேப்போல் பள்ளிகளின் கழிவறையை சுத்தம் செய்ய சொல்வது, தன் வீட்டு வேலைகளை செய்ய சொல்வது என்று மாணவ, மாணவிகளை துன்புறுத்திடும் புகார்களிலும் சிக்கிக் கொள்கிறார்கள்.  இந்நிலையில், கோவையை சேர்ந்த தலைமையாசிரியர் கடுமையான புகார் ஒன்றில் சிக்கி, சஸ்பெண்ட் ஆகியுள்ளார். 
விவகாரம் இதுதான்…

கோவை தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் பழனிச்சாமி. பள்ளியில் இவரது அறையின் வெளிப்புறத்தில் கொசுத்தேனி எனப்படும் ஒரு வகை தேனி கூடு கட்டியிருந்திருக்கிறது. இதை அப்புறப்படுத்திட நினைத்தவர் தன் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர்களான  சந்துரு, சக்திவேல், சூர்யா ஆகியோரை அழைத்து, தேன் கூட்டை தீ வைத்து அகற்றச்  சொல்லியுள்ளார். அவரும் மாணவர்களின் பக்கத்திலேயே நின்று, டைரக்ட் செய்துள்ளார். 

மாணவன் சந்துரு, ஒரு குச்சியில் துணியை சுற்றி அதில் நெருப்பை பற்ற வைப்பதற்காக பள்ளியில் இருந்த சானிடைசரை எடுத்து துணிப்பந்தத்தில் ஊற்றி, தீ பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத வகையில் சானிடைசர் பாட்டிலிலும் தீ பற்றியதோடு, அந்த மாணவனின் யூனிஃபார்மிலும் பற்றியுள்ளது. உடனே  மாணவனை பூலுவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். 

அங்கே முதலுதவி தரப்பட்டு பின் கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக மாணவர் சேர்க்கப்பட்டுள்ளார். சந்துருவிற்கு அடி வயிறு முதல் தொடை வரையில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை தரப்பட்டுள்ளதாகவும் அரசு  மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்த்து நலன் விசாரித்து, ஆறுதல் கூறி உதவிகளை செய்துள்ளனர். அதன் பின் மாணவனை தனியார் மருத்துவமனைக்கு கூடுதல் சிகிச்சைக்காக அனுப்பினர். 

இதன் பின், தலைமையாசிரியர் பழனிசாமியை விசாரித்து, சஸ்பெண்ட் செய்துள்ளார் மாவட்ட கல்வி அலுவலர்! கொசுத்தேனி கூடு கட்டப் போக, கடைசியில் தலைமையாசிரியர் வீட்டில் உட்கார வேண்டிய நிலைமையாகியுள்ளது. பள்ளிப் பிள்ளைகளை தங்களின் ஏவலுக்கான அடிமைகள் போல் நடத்துவது எந்த வகையில் நியாயம்? ஆசிரியர்மாரே இது நியாயமாரே?!

-ஷக்தி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow