ஐ.பெரியசாமி வழக்கு விசாரணைக்கு தடை கிடையாது...!உச்சநீதிமன்றம் க்ரீன் சிக்னல்!
இடைக்கால தடைக்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், கீழமை நீதிமன்றத்திலேயே இதற்காக மனு தாக்கல் செய்யலாம் என தெரிவித்தனர்.
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கில் இடைக்கால தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, வீட்டுவசதி துறை சார்பில் மக்களுக்கு வழங்கப்பட இருந்த வீடுகளை முறைகேடாக கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதாக 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.பெரியசாமியை விடுவித்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த நிலையில், பிப்ரவரி 26ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கில் ஐ.பெரியசாமியை விடுவித்தது செல்லாது என்றும், வழக்கை மார்ச் 28ஆம் தேதி எம்.பி., எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், வழக்கு தொடர்பான விசாரணைக்கு இடைகால தடைவிதிக்கக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அத்துடன் சபாநாயகர் உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்ததாகவும், அதிகாரமற்ற ஒருவர் உத்தரவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது தவறானது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ரிஷிகேஷ் தலமையிலான அமர்வு முன் இன்று (மார்ச்-18) விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்கால தடைக்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், கீழமை நீதிமன்றத்திலேயே இதற்காக மனு தாக்கல் செய்யலாம் என தெரிவித்தனர். அத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீட்டு மனு தொடர்பாக 4 வாரத்திற்குள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
What's Your Reaction?