சீர்காழி அருகே இறந்தவரின் உடல் சாலையில் புதைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு

சாலை அமைக்கும்படி மக்கள் கூறியதோடு தற்போதைய இடத்தில் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பும்

Dec 20, 2023 - 19:01
சீர்காழி அருகே இறந்தவரின் உடல் சாலையில் புதைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு

சீர்காழி அருகே இறந்தவரின் உடல் சாலையில் புதைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரம் ஊராட்சியில் கீழகரம் கிராம்ம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.இவர்கள் தங்களது கிராமத்திற்கு அடிப்படி வசதிகளான சாலை, குடிநீர் என எவ்வித வசதிகளும் இன்றி தவித்துவருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சரின் கிராம சாலைகள் இணைப்புத்திட்டத்தின் கீழ் ரூ.42 இலட்சம் செலவில் கீழகரம் கிராமத்திலிருந்து மயானத்திற்கு செல்ல 823 மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மேலும் அப்பகுதி விவசாயிகள் தங்கள் வயல்வெளிக்கு சென்றுவரவும், முதலைமேடு, அனுமந்தபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் இணைப்புச்சாலையாகவும் இருந்துவந்த இந்த சாலை தற்போது தார்சாலையாக மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இந்த சூழலில் 600 மீட்டருக்கு சாலை அமைக்கும் பணி முடிவுற்று தொடர்ந்து பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் கீழகரம் கிராமத்தைச்சேர்ந்த செளந்தர்ராஜன் என்பவர் இறந்துவிட அவரது  உடலை கீழகரம் கிராமத்தைச்சேர்ந்தவர்கள் எடுத்துவந்து மயானத்திற்கு செல்லும் சாலையின் வழியிலேயே குழியை தோண்டு புதைத்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன், கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். அவர்களிடம், “தற்போது சாலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் நாங்கள் பல தலைமுறைகளாக இறந்தவர்களை அடக்கம் செய்துவருகிறோம். இந்த இடத்தில் சாலை அமைக்கப்பட்டால் எங்களுக்கு இடுகாடு இல்லாமல் போய்விடும். எனவே மாற்று இடத்தில் சாலை அமைக்கும்படி மக்கள் கூறியதோடு தற்போதைய இடத்தில் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அதிகாரிகள் ’அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாய்வு செய்து இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்’ என்று கூறிச்சென்றனர்.இந்நிலையில் சாலையில் குழி தோண்டி இறந்தவரின் உடலை புதைத்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow