சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை:அரசியல் சட்டப்படி கட்டாயம் அல்ல - சென்னை உயர்நீதிமன்றம் 

சட்டமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நேரடி ஒளிபரப்பு செய்ய செய்வது என்பது அரசியல் சட்டப்படி கட்டாயம் இல்லை என்றும் குறிப்பிட்டார். 

Dec 21, 2023 - 12:47
Dec 21, 2023 - 19:16
சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை:அரசியல் சட்டப்படி கட்டாயம் அல்ல  - சென்னை உயர்நீதிமன்றம் 

தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பது அரசியல் சட்டப்படி கட்டாயம் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த், சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி அதிமுக சட்டமன்ற கொறடா எஸ்பி வேலுமணியும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கடந்த முறை இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? என விளக்கம் அளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வேலுமணி தரப்பில், அரசியல் சட்டப் பிரிவுகளை மேற்கோள்காட்டி சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க எந்த தடையும் இல்லை என்று வாதிடப்பட்டது.

ஆனால் தலைமை நீதிபதி சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப முடியாது என்றும், உயர்நீதிமன்றம் அனுப்பும் நோட்டீஸ் அவரை கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்தார். மேலும் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வேலுமணி தரப்பு மூத்த வழக்கறிஞர், இ-விதான் செயலி மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடியும் என்றும் பல சட்டமன்றங்கள் இதை வெற்றிகரமாக அமல்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.மேலும் அவர் தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேசும்போது நேரடி ஒளிபரப்பானது துண்டிக்கப்படுவதாகவும் ஆளுங்கட்சியினர் பேசும்போது நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.

இதுபோன்று கடுமையான குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என்று அரசு தலைமை வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார்.தொடர்ந்து தலைமை நீதிபதி, நேரடி ஒளிபரப்பை செய்வது என்பது சூழலைப் பொறுத்தது என்றும், சட்டமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நேரடி ஒளிபரப்பு செய்ய செய்வது என்பது அரசியல் சட்டப்படி கட்டாயம் இல்லை என்றும் குறிப்பிட்டார். 

மேலும் எதிர்க்கட்சியினருக்கு பாரபட்சம் காட்டப்படுவதை நிரூபிப்பது குறித்து வேலுமணி தரப்பு வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி விளக்கம் கேட்டார்.இது குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் கோரிக்கை எடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஜனவரி 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow