சீனாவில் பயின்ற இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவிக்கு நேர்ந்த சோகம்
மகளின் உடலை கொண்டு வர 22 லட்சம் ருபாய் கேட்பதால் அதை திரட்ட முடியாத நிலை உள்ளதாலும் உதவி கேட்டு இந்திய வெளியுறவுத்துறைக்கும் மாநில அரசுக்கு மனு அளித்து உள்ளனர் .

சீனா நாட்டிற்கு மருத்துவம் படிக்க சென்ற குமரி-கேரள எல்லையை சேர்ந்த மாணவி படிப்பு முடிந்து ஊருக்கு திரும்ப இருந்த நிலையில், திடீர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி-கேரள எல்லையோர பகுதியான இடைக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட புல்லத்தேரி பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் நாயர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.இவரது மகள் ரோகிணி நாயர் (27). இவருக்கு சிறு வயது முதலே மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்ததால் ஒரே மகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டி, இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க முயன்றுள்ளார். ஆனால் இங்குள்ள கல்லூரிகளில் அதிகதொகை கேட்டதால் கைவசம் பணம் இல்லாததால் துவண்டு இருந்தபோது கேரளாவை சேர்ந்த ஒரு ஏஜென்சி மூலம் சீனாவில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் வங்கி கடன் வாங்கி சேர்ந்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக அங்கு படித்து வரும் ரோகிணி வருகிற ஜனவரி மாதம் 12ம் தேதி படிப்பு முடிந்து சொந்த ஊருக்கு திரும்ப இருந்த நிலையில் கடந்த 12ம் தேதி ரோகிணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக உடன்பயிலும் மாணவிகள் ரோகிணியின் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து ரோகிணியும் 13ம் தேதி தாயாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தனக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளதாகவும், ட்ரிப்ஸ் போட்டபின் பேசுவதாக மெசேஜ் அனுப்பி உள்ளார்.
இதற்கிடையே 13ம் தேதி நள்ளிரவு ரோகிணியுடன் பயிலும் மாணவிகள் கோபாலகிருஷ்ணனுக்கு போன் செய்து ரோகிணி இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கோபாலகிருஷ்ணன் ரோகிணியை சீனாவுக்கு அனுப்பிய ஏஜென்சியை தொடர்பு கொண்ட போது அவர்கள் எந்த பதிலும் தராமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் மாணவி பயிலும் கல்லூரியில் இருந்து மாணவியின் பெற்றோருக்கு ஒரு மெயில் அனுப்பி உள்ளனர். அதில் மாணவி ரோகிணிக்கு திடீரென வாந்தி தலைவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனையில் இரத்தத்தில் அணுக்கள் குறைவாக இருந்ததாகவும், திடீரென மயக்கமடைந்து சுயநினைவு இழந்ததாகவும், தொடர்ந்து மாணவி வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு மாற்றப்பட்டு எக்ஸ்ரே ஸ்கேன் உள்ளிட்டவை எடுத்தபோது அவரது உள்ளுறுப்புகள் பல செயலிழந்து இருந்தது தெரியவந்தது என்றும் அதற்கிடையே மாணவி உயிரிழந்ததாகவும் நேற்று முன்தினம் அனுப்பி உள்ளனர்.
மேலும் மாணவியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும் என்றால் 22 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்றும் கூடுதல் தகவல்கள் வேண்டும் என்றால் உறவினர்கள் சீனாவிற்கு வரவேண்டும் என்றும் கூறி உள்ளனர்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுது என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து வருவதோடு ஏற்கனவே மகளை படிக்க வைக்க வேண்டி வங்கிக்கடன் ஏராளம் வாங்கி உள்ளதாகவும் தற்போது மகளின் உடலை கொண்டு வர 22 லட்சம் ருபாய் கேட்பதால் அதை திரட்ட முடியாத நிலை உள்ளதாலும் உதவி கேட்டு இந்திய வெளியுறவுத்துறைக்கும் மாநில அரசுக்கு மனு அளித்து உள்ளனர் .
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு மகளின் உடலை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?






