போக்குக்காட்டும் சிறுத்தை... மயிலாடுதுறையில் நீடிக்கும் பீதி... வனத்துறை அதிகாரிகள் சொல்வதென்ன?

Apr 9, 2024 - 13:46
போக்குக்காட்டும் சிறுத்தை... மயிலாடுதுறையில் நீடிக்கும் பீதி... வனத்துறை அதிகாரிகள் சொல்வதென்ன?

மயிலாடுதுறை மாவட்டம் காஞ்சிவாய்  பகுதியில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் ஏழாவது நாளாக இன்று சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உலாவரும் சிறுத்தையால் மயிலாடுதுறை மக்களிடையே பீதி நீடிக்கிறது.

மயிலாடுதுறையில் கடந்த 2 ஆம் தேதி முதல் சிறுத்தை நடமாடி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. செம்மங்குளம் பகுதியில் வைக்கப்பட்ட தானியங்கி கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் படத்தை வனத்துறையினர் வெளியிட்டனர். சிறுத்தை நீர் வழி தடங்கள் வழியாக இடம் மாறுவது தெரியவந்தது. மகிமலையாறு நண்டலஆறு வீர சோழன் ஆற்றுப் பகுதிகளின் வழியாக சிறுத்தை மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டர் தூரம் இடம்பெயர்ந்து குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் பகுதியில் திரிவதாக தகவல் வெளியானது. வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு ஆய்வு செய்ததில் சிறுத்தையின் காலடித்தடம் கண்டறியப்பட்டது.

கோயம்புத்தூரில் இருந்து வந்திருக்கும் நிபுணர் குழு முப்பது கேமரா ட்ராப்புகள் வைத்து களத்தில் சிறுத்தையை தேடி வருகின்றனர். 7 வது நாளான இன்று டி23 புலியை பிடித்ததில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன் காலன் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 30 கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், நேற்று வைக்கப்பட்ட கூண்டுகளில் சிறுத்தை சிக்கவில்லை. காஞ்சிவாய் கிராமத்தில் நேற்று சிறுத்தையின் கால் தடம் தென்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது மயிலாடுதுறை மாவட்ட எல்லையான காஞ்சிவாய், பேராவூர் ஊராட்சிகளில் கடந்த இரண்டு நாட்களாக சிறுத்தை இருப்பதற்கான தடையங்கள் தென்படுவதால், அருகிலுள்ள தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட வன அலுவலர்கள் மூலமாக கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் கூறியுள்ளார். இதனால் மக்கள் பீதியில் உரைந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow